இலங்கையிலுள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றியர் மைக்கல் அருள் ஜேசு -. பண்டாரவளையில் வசிக்கின்றார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்புகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த மைக்கல் அருள் ஜேசு, தற்போது நடமாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
திடீரென நோய்வாய்ப்பட்ட மைக்கல் அருள் ஜேசுவின் வாழ்க்கை, தற்போது ஒரே இடத்திலேயே முடங்கிவிட்டது.
'மல்டிபிள் ஸ்களிரோசிஸ்' என்ற நோய், மைக்கல் அருள் ஜேசுவை திடீரென தாக்கியது. பல்வேறு சிகிச்சைகளைப் பெற்ற போதிலும், அவரால் முன்பைப் போல செயற்பட முடியாதுள்ளது.
நடமாட முடியாத அருள் ஜேசு, சக்கர நாற்காலியிலேயே தனது பயணங்களை மேற்கொள்கிறார். அதேபோன்று, செய்தி வாசிப்பில் திறமைகளை வெளிப்படுத்திய அருள் ஜேசு, இப்போது பேசுவதற்குக் கூட தடுமாறுவதை அவதானிக்க முடிந்தது.
ஆசிரியத் தொழிலை கைவிட்ட மனைவி
அருள் ஜேசு எதிர்நோக்கியுள்ள இந்த நிலைமையை அடுத்து, அவரை 24 மணி நேரமும் ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பின்னணியில், ஆசிரியையாகக் கடமையாற்றிய அவரின் மனைவி - தொழிலை விட்டு விலகி, தற்போது அவரைக் கவனித்து வருகிறார்.
குடும்ப தலைவரின் வருமானம் முழுமையாக இல்லாது போனதுடன், அவருடைய மனைவியின் வருமானமும் முழுமையாக இல்லாது போயுள்ளது.
அருள் ஜேசுவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அவர்களின் கல்வியைக்கூட தொடர்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்படி பல்வேறு சவால்களை எதிர்நோக்கியவாறே, அருள் ஜேசுவின் குடும்பம் நாட்களைக் கடத்தி வருகிறது.
''இலங்கையிலுள்ள பெரிய ஊடக நிறுவனத்தில் நான் செய்தி தயாரிப்பாளராகவும், வாசிப்பாளராகவும் வேலை செய்தேன். ஒரு நாள் வானொலியில் செய்தி வாசிக்கும்போது வாய் திக்கியது.
அதற்குப் பிறகு நான் செய்தி வாசிக்கவில்லை. செய்தி தயாரிப்பை மாத்திரம் செய்தேன். இப்போது வீட்டில் இருக்கின்றேன். என்னால் பேச முடியாது. என்னால் நடக்க முடியாது" என அருள் ஜேசு குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தான், கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் மேலும் பல்வேறு இன்னல்களை அனுபவித்ததாக மைக்கல் அருள் ஜேசு கூறுகின்றார்.
''கொரோனா எனக்கு பெரிய அடியாக அமைந்தது. பொருளாதார சிக்கல். இரண்டு பிள்ளைகள் படிக்கின்றார்கள். இப்போது ரொம்ப கஷ்டம். வீட்டில் யாருக்கும் வேலை இல்லை" என மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அருள் ஜேசு கூறினார்.
மருந்துக்குக் கூட பணமில்லை
தன்னுடைய கணவர் எதிர்நோக்கியுள்ள நிலை காரணமாக - தனது குடும்பம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து, மைக்கல் அருள் ஜேசுவின் மனைவி ஏசிலானி தெளிவூட்டினார்.
''முதலில் ஆசிரியர் தொழிலைச் செய்தேன். கணவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததனால்; தொழிலை விட்டு விட்டேன். இந்த நோய் எப்படி வந்தது என்று சொல்ல முடியாது.
கிருமிகள் தலையைத் தாக்கியதே இதற்குக் காரணம் என டொக்டர்கள் சொன்னார்கள். ஒரு கிழமையில் சுகமாகலாம். இரண்டு மாதங்களில் சுகமாகலாம் ஓரிரு ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளில் சுகமாகலாம், அல்லது சுகமாகாமலும் போகலாம் என்று நேரடியாகவே சொன்னார்கள்.
கொரோனா, பொருளாதார நெருக்கடி காலங்களில் நிறைய சவால்களை எதிர்நோக்கினோம். பிள்ளைகளின் படிப்பு, வீட்டு செலவு எனப் பல பிரச்னைகளை எதிர்நோக்கினோம். நிறைய நகைகளை வைத்துத்தான் செலவுகளைச் செய்தோம். இவ்வளவு காலமும் அதைத்தான் செய்கின்றோம்" என அவர் கூறினார்.
தனது கணவருக்கு மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளும் விதம் மற்றும் மருத்துவத்துக்காக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அருள் ஜேசுவின் மனைவி குறிப்பிட்டார்.
''நிலைமை சரியான மோசமாகத்தான் இருக்கின்றது. இவரை தூக்கிக் கொண்டுதான் போவோம். நிறைய கஷ்டமாகத்தான் இருக்கும். நிறைய சமாளித்து தான் செய்கின்றேன். அரச மருத்துவமனையில்தான் மருந்து எடுப்போம். மருந்துகளை -மருந்துக் கடையில் வாங்கச் சொல்லித்தான் டொக்டர் எழுதிக் கொடுப்பார்.
மருந்துகளை ஒன்றரை மாதங்களுக்கு தான் எழுதிக் கொடுப்பார்கள். அதற்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். மருந்தகத்தில் கடன் வைத்து தான் மருந்தை வாங்குகின்றோம். சில மருந்துகள் இல்லை எனக் கூறுகின்றார்கள். சமாளிக்கின்றோம். மிகவும் சிரமப்பட்டுத்தான் வாழ்கின்றோம்" என அவர் கூறுகின்றார்.
அருள் ஜேசுவின் வங்கி கணக்கு விபரம்
M. Arul jesu,
A/C No - 78959693
BOC Super Grade Branch,
Borella.