இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்பதனக் கிடங்கில் இருந்து எடுத்து சாதாரண சூழலில் விற்பனை செய்தால் மூன்று நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் என இலங்கை அரச வர்த்தக (இதர) சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரியை வலிசுந்தர தெரிவித்தார்.
ஆனால் அந்த முட்டைகளை குளிர்பதனக் கிடங்கில் இரண்டு டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் மூன்று மாதங்களுக்கு வைத்திருக்கலாம் என்றும், வெளியே எடுத்து விற்பனை செய்த பிறகு, நுகர்வோர் மூன்று நாட்களுக்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து முட்டைகள் இரண்டு டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ் வைக்கப்படும் குளிர்பதனக் கிடங்குகளில் வைத்தே இறக்குமதி செய்யப்படுகின்றன, நாட்டுக்கு கொண்டு வர இதற்கு 18 மணி நேரம் ஆகும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நேற்று முன்தினம் (25) முதல் சதொச மற்றும் சுப்பர் மார்க்கட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
சதொசவில் முதல் நாளில் மட்டும் இரண்டு இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் முட்டைகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் சதொசவில் நேற்று (26) பிற்பகல் வேளை வரைக்கும் சுமார் 80,000 முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், பொரளையில் உள்ள சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்ட ஆறாயிரம் முட்டைகள் நான்கு மணித்தியாலங்களில் விற்பனை செய்யப்பட்டன. இந்த முட்டைகளை சதோச மற்றும் சுப்பர் மார்க்கட்டுக்களில் 35 ரூபாய்க்கு வாங்கலாம்.