(எம்.வை.எம்.சியாம்)
மீன்பிடித் துறையில் நாம் பெற்றுக் கொள்ளும் பங்களிப்பு 1.4 வீதமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த அரசாங்கத்துக்கு மீனவர்கள் தொடர்பில் எந்தவித அக்கறையும் கிடையாது. நாட்டைச் சூழவுள்ள மீன்பிடி வலயங்களின் பயன்களை நாடு என்ற வகையில் ரீதியில் உரிய முறையில் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தொடங்தூவ மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை சுற்றி கடல் இருந்தும் கடலோர பகுதிகள் எது? கடலின் 200 மைல் தொலைவிலுள்ள பொருளாதார வலய உரிமையை எமது நாடு பெற்றிருந்தாலும், சர்வதேச சட்டத்துக்கு அமைவாக மீன்பிடித் துறையில் நாம் பெற்றுக் கொள்ளும் பங்களிப்பு 1.4 வீதம் என்றால் அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு மீனவர்கள் தொடர்பில் எந்தவித அக்கறையும் கிடையாது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு நீர்கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலான கடல்பகுதி மாத்திரமே என கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளமை பாரிய பிரச்சினையாகும். எனினும் கடந்த காலங்களில் புத்தளம் கடற்பரப்பிலும் அந்த கப்பலில் காணப்பட்ட திரவங்கள் வந்தன. எனவே கடற்றொழில் அமைச்சின் தலையை முதலில் சரி செய்ய வேண்டும் என்றார்.
இதன்போது குறித்த பகுதி மக்கள் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிவித்ததுடன் அதற்கான உரிய தீர்வுகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தினர்.