ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் 13 ஆவது திருத்த அமுலாக்கம் மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்தவார இந்திய விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.
இருப்பினும் அதற்கு முன்னர் இடம்பெற்ற வட, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.
அந்த யோசனையை சில கட்சிகள் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், இலங்கைத் தமிழரசுக்கட்சி அதனை முற்றாக நிராகரித்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இந்தியப்பிரதமரின் வலியுறுத்தல் தொடர்பில் கடந்த சனிக்கிழமை தெளிவுபடுத்திய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் தனித்துத் தீர்மானிக்கமுடியாது.
எனவே, இதுகுறித்து கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இலங்கை இறுதித்தீர்மானத்தை அறிவிக்கும் என்றும், அது தவிர்ந்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தமுடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.
இன்று (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த ஏனைய வட, கிழக்கு தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வர்.
அதேவேளை, இச்சந்திப்பைப் பிற்போடுமாறு பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியதாக அறியமுடிகின்றது. இருப்பினும் இச்சந்திப்பில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.