அண்மையில் முல்லைத்தீவு பிரதேசத்துக்குச் சென்றிருந்தீர்கள். அதனைத் தொடர்ந்து உங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது?
இதற்கு முன்னர் அங்கு நான் சென்றதில்லை. அதன் காரணமாகவே அங்கு சென்றிருந்தேன். அதன்போது, நீதவானும் பரிசோதனைக்காக அங்கு வந்திருந்தார். மேலும், சட்டத்தரணிகள், சிவிலியன்கள் சிலரும் விளக்கமளிக்க வந்திருந்தார்கள்.
திரிசூலமொன்றை வைத்து வழிபாட்டில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியிருந்தார்கள். அதற்கு நான், 'நீங்கள் நேர்மையானவர், இந்த விடயத்துக்கு நீங்கள் ஒரு பதிலை வழங்க வேண்டும்" என்று நீதவானிடம் கோரினேன். அங்கிருந்த சட்டத்தரணிகள் எனது கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.
நீதவான் எனது கோரிக்கையை நிராகரித்திருந்தார். அதற்கு நான் எந்தப் பதிலும் வழங்கவில்லை. அமைதியாக இருந்துவிடடேன்.
அந்த இடத்தில் எந்த முரண்பாடும் இடம்பெறவில்லை. நான் அனுமதி கேட்டபோதிலும் அதற்கு அவர் அனுமதி வழங்கவில்லை. அதன்பின்னர் அதுகுறித்து நான் எதுவும் பேசவில்லை.
இருந்தபோதும் , நீங்கள் நீதித்துறையை அவமதித்துவிட்டதாக குறிப்பிட்டல்லவா வடக்கு, கிழக்கிலுள்ள சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்?
எனது பாராளுமன்ற உரையை சுட்டிக்காட்டியே சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை சகலரும் தெளிவாக கேட்கவேண்டும். நான் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்தே சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தை நான் கணக்கிற்கொள்ளவில்லை.
இருந்தபோதும், நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக தெரிவித்து சட்டத்தரணிகள் சங்கம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.
நான் அவ்வாறு நீதித்துறைக்கு அவதூறு எதுவும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்து சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளேன். அவ்வாறு நான் எந்த அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை. அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்க எண்ணியதும் இல்லை.
இருந்தபோதும், நீதித்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே அச்சுறுத்தல் விடுத்தார். அவரே, உயர் நீதிமன்றத்தை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எமது நீதித்துறையை முழுமையாக காட்டிக்கொடுத்தார்கள். காட்டிக்கொடுத்தது மாத்திரமல்லாமல், ஊழல்வாதிகள் என்று அறிவித்தார்கள். அதன்போது, சட்டத்தரணிகள் சங்கமோ அல்லது முல்லைத்தீவிலுள்ள சட்டத்தரணிகளோ எதுவும் கூறவில்லை.
உண்மையைக் கூறி எமது நீதித்துறையின் மதிப்பை பாதுகாத்துக்கொள்ள நானே போராடினேன். அவ்வாறு செயற்பட்ட நான் எவ்வாறு நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுப்பேன். ஆகவேதான் என்னுடைய பாராளுமன்ற உரையை முறையாக கேட்க வேண்டும் என்று கோருகிறேன்.
வடக்கு பிரதேசங்களில் பௌத்த தொல்பொருள் ஆதாரங்கள் இருக்கின்றன என்று நீங்கள் கூறுவதுபோன்று, அங்கு இந்து சமயத்துக்கான தொல்பொருள் ஆதாரங்கள் இருப்பதாக அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இரு நிலைப்பாடுகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
இரு நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மையாகும். ஆனால், அந்த நிலைப்பாடுகளை உறுதியாக்குவது யார்? நானோ, நீங்களோ, முல்லைத்தீவிலுள்ள சட்டத்தரணிகளோ அல்லது தொல்பொருள் ஆதாரங்களை உடைத்து அழிக்கும் குண்டர்களோ இந்த நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தப்போவதில்லை. அதனை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும்.
அந்த அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரமும் இருக்கிறது. அதன் காரணமாகவே பௌத்த தொல்பொருள் ஆதாரங்களை இனங்கண்டு, பௌத்த தொல்பொருள் ஆதாரங்களைக்கொண்ட முக்கிய அறிக்கையாகக் கருதப்படும் மகாவம்சத்தை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் இருக்கும் தொல்பொருள் ஆதாரங்களை ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்துகிறார்கள். அந்த தொல்பொருள் ஆதாரங்கள், விகாரைகள், ஆலயங்கள் எந்த மன்னனின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை அந்த அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட இடமொன்றில் திரிசூலமொன்றை வைத்து விளக்கேற்றி வழிபடுவது தவறான செயற்பாடாகும். தென்பகுதிகளிலுள்ள கோவில்களை உடைத்துவிட்டு அந்த இடங்களில் புத்தர்சிலைகளை நாங்கள் அமைக்கப்போவதில்லை. ஒரு இடத்தை பார்த்ததும் இங்கு இருப்பது பழைமையான பல வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை, தூண்கள் என்பன பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்துகின்றன என்பதை எந்தவொரு நபராலும் இலகுவாக புரிந்துகொள்ள முடியும். அவ்வாறிருக்கையில், அங்கு எவ்வாறு இந்து ஆலயமொன்று இருந்திருக்க முடியும்.
கொழும்பில் கூட தேவையானளவு இந்துக் கோவில்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கு நாங்கள் எதிர்ப்பை வெளியிடுவதில்லை. சமாதானமாக இருக்கும் பௌத்த மற்றும் இந்து மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்தவே தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகளே இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதற்கு காரணமானவர்கள்.
இதுபோன்ற செயற்பாடுகளை தடுத்துநிறுத்த நாங்கள் அறிவுபூர்வமாக சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாங்களும் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபடுகின்றோம். நாங்களும் இந்து தெய்வங்களை மதிக்கின்றோம். அவ்வாறிருக்கையில் எதற்காக பௌத்த - இந்து மக்கள் மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை.
இது 2000 வருடங்கள் பழைமையான பௌத்த கட்டடம். இவ்வாறு அடையாளம் காணப்படும் ஆதாரங்கள் சிங்கள - பௌத்த மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவை அல்ல. நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உரிமையானவையாகும்.
இவ்வாறு கட்டடங்களை மறுசீரமைப்பு செய்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேசிய சுற்றுலாப் பயணிகளால் அந்தப் பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கே வருமானம் கிடைக்கும். அவர்களின் வாழ்வாதாரமே உயரப் போகிறது. முஹ{து மகா விகாரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அநேகமாக அந்தப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் கடைகளிலேயே உணவு உண்கிறார்கள்.
எனவே, இந்த விடயங்களில் தவறான விளக்கமளிப்பது தவறாகும். இவை சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல இனத்தவர்களுக்கும் உரிமையானவை. இவ்வாறான தொல்பொருள் ஆதாரங்களில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வது தவறாகும். அதனை நான் நேரில் பார்த்துள்ளேன். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை. தொல்பொருள் ஆதாரமென்றால் அதனை நாம் உயிரைப்போன்று பாதுகாக்க வேண்டும். அவ்வாறான கட்டடக் கலைகளை மீண்டும் நிர்மாணிக்க முடியாது. அவை எமது நாட்டுக்கு பெறுமதி சேர்ப்பவை. எனவே, இதுதொடர்பில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே இறுதித் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு அங்கு கோவில் இருந்திருந்தாலும் நாங்களும் அங்கு சென்று வணங்குவோம். விகாரை இருந்திருந்தாலும் வணங்குவோம். அதற்குப் பதிலாக அவற்றை உடைத்து சேதப்படுத்துவது ஒழுக்கமான செயற்பாடல்ல.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள இந்து சமய வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாத்துத் தருமாறு தமிழ்த் தலைவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். அதன்போது இந்த விடயங்கள் குறித்தும் பேசப்படாலாம். இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
நாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களின் வழிபாட்டு நடவடிக்கைகள் அவ்வாறே இடம்பெற்று வருகின்றன. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இலங்கையில் அநேகமான புதிய கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதுவரையில், இந்து சமயத்துக்கோ அல்லது இஸ்லாமிய சமயத்துக்கோ எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டதில்லை. யாரிடமும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், பௌத்த தொல்பொருட்களை சேதப்படுத்தி அவற்றின் மீது கோவில்களை அமைப்பதற்கு இந்தியா மட்டுமல்ல, வேறெந்த நாட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதனை தடுத்து நிறுத்துவோம்.
வெளிநாடுகளிலிருந்து எமக்கு அழுத்தம் வரும்போது, ஒரே தேசத்தவர்கள் என்றவகையில் சிங்கள, இந்து, முஸ்லிம், பௌத்தம், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றுபடவேண்டும்
.
தமிழ் அரசியல் வாதிகளே, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி சமாதானத்தை இல்லாமல் செய்து வருகிறார்கள். விடுதலைப் புலிகளால் கர்ப்பிணித் தாய்மார் கொலை செய்யப்படும்போது கொழும்பிலிருந்து அவர்கள் பாதுகாப்பதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. மக்களை தாக்கி ஸ்ரீ மகா விகாரையை சேதப்படுத்தியபோது நாங்கள் கோவில்களை உடைக்கவில்லை. அவ்வாறிருக்கையில் எதற்காக பௌத்தர்ளின் பொறுமையை சோதிக்கிறார்கள்.
இந்தியாவோ, அமெரிக்காவோ எந்தவொரு வெளிநாட்டிலிருந்து அழுத்தம் வந்தாலும் ஒரே தேசத்தவர்கள் என்ற அடிப்படையில் மக்கள் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். ஒன்றுபடுவதற்காகவுள்ள சமத்துவத்தையே தற்போது இல்லாமலாக்க முயற்சிக்கிறார்கள். இது தேசத்துரோகமான செயற்பாடாகும்.
தேவையில்லாமல், இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி நாட்டின் சமத்துவத்தை இல்லாமலாக்கி சமத்துவத்தை சீர்குலைக்கவே முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து பணம் பெற்றுக்கொண்டே இதுபோன்ற செயற்பாடுகளை செய்கிறார்கள். சாதாரண தமிழ், இந்து மக்கள் மிகவும் அப்பாவியானவர்கள். இது அவர்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தபோதும், பிரிவினைவாத தமிழ் எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே இதனை செய்கிறார்கள். பௌத்த தொல்பொருள் ஆதாரங்களில் தமிழர்களுக்கான தொல்பொருள் ஆதாரம் இருந்தது என்று குறிப்பிடுவது முழுமையான பொய்யாகும். அந்தப் பொய்யை உண்மையாக்கவே இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
எந்த சமயத்துக்குச் சொந்தமானதான தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் அவை முழு நாட்டுக்கும் சொந்தமானவையாகும். இதனை புரிந்துகொள்ளவேண்டும்.
குருந்தூர் மலை விவகாரத்தில், அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு கடிதமொன்றையும் கையளித்துள்ளார்கள். அங்கு இந்து சமயத்துக்கான ஆதாரம் இல்லாமல் அவர்கள் உயர்ஸ்தானிகராலயம் வரையில் சென்றிருக்க மாட்டார்கள் அல்லவா?
அது தவறான செயற்பாடாகும். குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பழைமையான பௌத்த கல்வெட்டுகள் குருந்தூர் மலையிலேயே இருக்கின்றன. ஆகவே குருந்தூர் விகாரை முழுமையாக பௌத்த சமயம் சார்ந்தவொரு நிர்மாணிப்பாகும்.
இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், அரசாங்கம் ஏன் இதுதொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறது?
அதனை அரச தலைவரே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவரே, மக்களின் சமத்துவத்தை இல்லாமலாக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
உரையாடல் - நா.தினுஷா