(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செயற்பாடுகள் திருப்பதியடைய முடியாமல் இருக்கிறது. அதனால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்து மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகிறோம்.
தரமற்ற மருந்து காரணமாக பலர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து தேவையான உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சுகாதார அமைச்சர், வேறு காரணங்களை தெரிவித்து வருகிறார்.
அதனால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.
நாட்டில் மருந்து மாபியா தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கும் அரச தரப்பினர் முதுகெலும்பு இருக்குமானால் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட வேண்டும்
எனவே சுகாதார அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்காக, பிரேரணையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பத்திருக்கிறோம் என்றார்.
இதன்போது சபையில் இருந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அதற்கு பதிலளிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாகவும் தரமற்ற மருந்து தொடர்பாகவும் வேறு ஒரு தினத்தில் தெளிவான பதிலை இந்த சபைக்கு அறிவிப்பேன்.
அதேநேரம், தரமற்ற மருந்து என்ற பிரசாரம் நாட்டின் சுகாதார துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் மக்கள் அரச வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட்டு, தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும் வழியை ஏற்படுத்துவதற்கான திட்டமே இடம்பெறுகிறது.
அதனால் எதிர்க்கட்சி எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது அவர்களின் நடவடிக்கை. அதற்கு முகம்கொடுப்பதற்கு நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றார்.