இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய, நீதித்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு அந்நாட்டுப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராக உத்தரவிடும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக இஸ்ரேலில் பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் அமெரிக்கா, ஜேர்மனி முதலான நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படவுள்ள பல சட்டமறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முதலாவதாக இது இச்சட்டமூலம் அமைந்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் அவரின் கூட்டணி அரசாங்கமும் பாராளுமன்றத்தில் நேற்று இச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் அளித்தனர். அதேவேளை, எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை பகிஷ்கரித்தனர். எம்.பிகளில் சிலர் வெட்கம், வெட்கம் என கோஷமிட்டனர்.
120 எம்.பிகளைக் கொண்ட இஸ்ரேலிய பராளுமன்றத்தில் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 64 பேர் வாக்களித்தனர்.
இச்சட்டமானது எதேச்சதிகார அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துவதற்கு இச்சட்டம் அவசியம் என இஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.
இச்சட்டமறுசீரமைப்பானது இஸ்ரேலிய ஜனநாயகத்தின் தோல்வியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட், பாராளுமன்றத்தில் நேற்று விமர்சித்தார்.