சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் வெள்ளிக்கிழமை (28) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
குறித்த யுவதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவியாவார்.
கடந்த வியாழக்கிழமை (27) நடைபெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற குறித்த யுவதி விழா முடிந்து வெள்ளிக்கிழமை (28) பெற்றோருடன் சுழிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அன்றிரவு தந்தை வெளியே சென்றுவிட, தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே யுவதி தூக்கில் தொங்கியுள்ளார்.
மகளின் நிலையை பார்த்த தாய், அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கே அவரை பரிசோதித்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயும் தந்தையும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டும் சண்டையிட்டும் வந்ததால் மன விரக்தியடைந்து யுவதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், இந்த பட்டதாரி யுவதியின் தற்கொலை அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.