கொரோனா பரவலுக்கு பிறகு இளைஞா்களிடையே மாரடைப்பால் ஏற்படும் திடீா் மரணங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இந்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கூட மாரடைப்பு அதிகமாக ஏற்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு இது போன்ற இள வயது மாரடைப்புகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடா்பாக மக்களவையில் எழுத்துமூலமாக கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
”கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடா்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு திடீா் மாரடைப்பு ஏற்படுவது தொடா்பாக சுமாா் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதே போல், கொரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்புக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து சுமாா் 30 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயம் சாா்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இதயம் சாா்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் 60 கோடிக்கும் அதிகமானோா் பலனடைந்துள்ளனா். இதயம் சாா்ந்த நோய்களுக்கான பொதுப் பெயா் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு பதில் அளித்துள்ளார்.