Our Feeds


Monday, July 24, 2023

Anonymous

கிழக்கில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது. - இம்ரான் எம்.பி

 



கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 


வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு (24) திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது,


கிழக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு மேலதிக ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் எனக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.


இந்தத் தகவலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. உதாரணத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூல விஞ்ஞானப் பாடத்திற்கு 30 ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 52 தமிழ் மொழி மூல விஞ்ஞான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 


கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளதைப் போல 30 விஞ்ஞான ஆசிரியர்கள் மேலதிகம் என்றால் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வி உள்ளது. இதனைத் தவிர திருகோணமலை மாவட்டத்தில் 52 வெற்றிடம் இருக்கின்றதென்றால் இந்த 52 பேரும் வேறு எங்கோ பொறுப்புகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம்.


கிழக்கு மாகாணத்தில் மத்திய கணக்காய்வு உத்தியோகத்தர்கள். மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர்கள் என இரு வகுதியினர் உள்ள போதிலும் இது போன்ற விடயங்களை இவர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை. 


இவர்கள் இவை தொடர்பாக பரிசீலனை செய்து உரிய காலத்தில் தேவையான அறிக்கைகளை தேவையான இடங்களுக்கு இட்டிருந்தால் மாகாணத்தில் 30 பேர் மேலதிகமாக இருந்தும் திருகோணமலை மாவட்டத்தில் 52 வெற்றிடம் இருக்க வாய்ப்பில்லை. இது போலவே ஏனைய பாடங்களுக்கான நிலையும் உள்ளது.


மேலதிக ஆளணியினரை வைத்திருப்போர் அவை தொடர்பான நட்டங்களை பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்பாடுகள் உள்ள போதிலும் கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளின் பலவீனம் காரணமாக நீண்ட காலமாக ஆசிரியர் வளம் வீணடிக்கப்பட்டு வருகின்றது. சில பகுதிகளில் பற்றாக்குறையும் சில பகுதிகளில் மேலதிக மனித வளங்களும் என்ற நிலை உருவாகியுள்ளது. 


எத்தனை வருடங்களாக இவ்வாறு இந்த மேலதிக ஆசிரியர் ஆளணி தேவையான இடங்களில் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. 


திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடம் இருந்தும் கல்விக் கல்லூரி கற்கையை முடித்தவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்படாமைக்கு இது போன்ற பலவீன நிலைமைகளே காரணம்.


கணக்காய்வு அதிகாரிகள் சரியாக செயற்பட்டிருந்தால் உண்மையில் கிழக்கில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளார்களா என்ற தெளிவும் ஏற்பட்டிருக்கும். திருகோணமலை மாவட்ட ஆசிரியர்கள் திருகோணமலைக்கு நியமிக்கப்பட்டிருக்க வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »