பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனி நபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர் சட்டமூலத்தை அமுல்படுத்துவதாயின் – மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது வெற்றிபெறுவதோடு, சர்வஜன வாக்கெடுப்பிலும் அங்கிகரிக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 27 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றில் இது தொடர்பான விடயங்களைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடத்தாமல், கலைக்கப்பட்டகளை மீண்டும் கூட்டுவதற்கான முயற்சியொன்று, மேற்படி சட்டமூலத்தின் ஊடாக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.