ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அலிசப்ரி; நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலொன்றே நடப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கூறினார்.
“அப்படியென்றால் உங்கள் கட்சியின் (பொதுஜன பெரமுன) வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவா? அல்லது வேறு யார்”? என, இதன்போது நிகழ்ச்சி நடத்துநர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; “கட்சி அந்த நேரத்தில் யார் வேட்பாளர் என அறிவிக்கும். ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டில் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் உள்ளது. இன்னும் சில காலம் ஜனாதிபதியாக அவர் இருப்பது நாட்டுக்கு நல்லது” என்றார்.
இது இவ்வாறிருக்க, பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும், நாட்டில் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காகவுமே ரணில் விக்ரமசிங்கவை தாம் ஜனாதிபதியாக்கியதாக, அண்மையில் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்; “இந்த இரண்டு நோக்கங்களுக்கும் அப்பால் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் ஆதரவு வழங்கப் போவதில்லை” என கூறியிருந்த நிலையிலேயே, “ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நீடிக்க வேண்டும்” என, அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.