Our Feeds


Tuesday, July 18, 2023

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் கூட்டு சதித்திட்டங்கள் நிறைவேற இடமளியோம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

 

(எம்.மனோசித்ரா)

தேர்தல் ஆணைக்குழு மீதும் , நீதித்துறை மீதும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை ஊடாக இது தெளிவாகப் புலப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும்  ஜனநாயகத்தை அழிப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் கூட்டு சதி முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்க எதிர்க்கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை (17) விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் திடீரென நேற்று பாராளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கமைய தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஆணைக்குழுவும் அதன் உறுப்பினர்களும் எவ்வாறு செயற்பட்டனர் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக செவ்வாய்கிழமை (18) தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதன் ஊடாக ஜனநாயக நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு மீதும், நீதிமன்றத்திலுள்ள விசாரணைகளிலும் செல்வாக்கு செலுத்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளமையானது, தற்போதைய தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல், வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்பதையும், அவ்வாறில்லை எனில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்றவாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவே இது அமைந்துள்ளது.

அதேபோன்று நீதித்துறையானது அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு ஏற்பட செயற்படவில்லை எனில் , நீதிபதிகளையும் தெரிவுக்குழுவில் முன்னிலைப்படுத்த வேண்டியேற்படும் என்றும் அரசாங்கம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இந்த அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டை பழைய முறைமையிலேயே நிர்வகித்துச் செல்வதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

உண்மையில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மக்களின் இறையாண்மையையும், சர்வஜன வாக்குரிமையையும் மறுத்து வறுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம் நீதிமன்றத்திற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும்  அழுத்தம் பிறயோகிப்பதற்கு தயாராகி வருகிறது.

பாராளுமன்றத்திலுள்ள பொதுஜன பெரமுனவினரின் சிறப்புரிமைகள் மாத்திரமின்றி 220 இலட்சம் மக்களதும் சிறப்புரிமைகளே மீறப்பட்டுள்ளன. இதன் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க இடமளிக்க மாட்டோம். சுதந்திரமானதும் , பாரபட்சமற்றதுமான  தேர்தல் ஆணைக்குழு மீது செல்வாக்கு செலுத்தவும் இடமளிக்க மாட்டோம்.

தனித்து அன்றி எதிர்க்கட்சியின் சகல தரப்புகளையும் ஒன்றிணைத்து 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நீதித்துறையின் சுதந்திரத்தையும் தேர்தல் ஆணைக்குழுவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை அழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »