கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் தமது செயற்பாடுகளை சகல இன மக்களுக்கும் நியாயமாக முன்னெடுக்காவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இம்ரான் எம்.பி வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்று தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அவருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடித்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எனக்கு முகவரியிட்டு ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்ட தங்களது மேற்படி தலைப்பிலான G/EPC/23/PS/GEN ஆம் இலக்க 2023.07.24 ஆம் திகதியக் கடிதம் சார்பாக, ஒரு அரச அதிகாரி தனிப்பட்ட நபர் ஒருவருக்கு முகவரியிட்ட கடிதத்தை ஊடகங்களுக்கும் வழங்கிய செயற்பாட்டை இதன் மூலம் நான் முதற்தடைவையாக உங்களிடமே காண்கிறேன்.
எனது ஊடக அறிக்கை ஒன்றுக்கான பதிலாக அதனை நீங்கள் எழுதியுள்ளீர்கள். இருப்பினும் எனது ஊடக அறிக்கையை முழுமையாக வாசித்து விளங்கிக் கொள்ளாது நீங்கள் அதனை எழுதியுள்ளீர்கள் என்பதை எனது அறிக்கையை வாசித்துள்ள அனைவரும் விளங்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் நான் அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்தில் மாத்திரமல்ல ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தேன். எனினும் தாங்கள் எனது முகநூல் பக்கத்தின் அடிப்படையிலேயே அந்தக் கடிதத்தை எனக்கு எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஜனாப் ஏ.மன்சூர், திருமதி ஆர்.யூ.ஜலீல் ஆகியோரை பிரதிப் பிரதம செயலாளர்களாகவும் ஜனாப் எம்.எம்.நஸீர் அவர்களை பேரவைச் செயலாளராகவும் ஆளுநர் நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் மறுக்கவில்லை. அது எனது பேசு பொருளுமல்ல.
மேற்படி மன்சூர், நஸீர் ஆகிய உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தபின் தேவையான வெற்றிடங்கள் இருந்தும் அவர்களுக்கு பொறுப்புகள் எதனையும் வழங்காது வெறுமனே எத்தனை மாதங்கள் வைத்திருந்தீர்கள். அதனால் அவர்களுக்கு எவ்வகையான மன உழைச்சல் ஏற்படுத்தப்பட்டது என்பதையும், திருமதி ஆர்.யூ.ஜலீல் சிரேஷ்ட உத்தியோகத்தராக இருந்தும் அவருக்கு நிர்வாகத் தலைமைப் பொறுப்பு வழங்காது எத்தனை மாதங்கள் அவரை சிரேஷ;ட உதவிச் செயலாளராக வைத்திருந்து அவருக்கு மன உழைச்சல் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தாங்கள் சொல்லியிருக்க வேண்டும்.
இவை அனைத்தும் நீங்கள் ஆளுநரின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில் தான் நிகழ்ந்தவை. எனினும், அதனை நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. பல உயர்பதவிகள் இருந்தும் பிரதிப் பிரதம செயலாளர் பதவியும், பேரவை இல்லாத பேரவைக்கு செயலாளர் பதவி வழங்கியுள்ளமையும் தானா முஸ்லிம் அதிகாரிகளுக்கு உங்களால் கொடுக்கக் கூடிய உயர் பதவிகள். சமுகத்தில் பிழையான விம்பத்தை ஏற்படுத்துவது யார் என்பதை இப்போது சொல்லுங்கள்
நியதிச் சபைகளில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட முஸ்லிம்கள் என ஒரு பட்டியலும் நியமனத் திகதியும் உங்கள் கடிதத்தில் உள்ளது. அவர்கள் கடமையேற்ற திகதியையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தால் தான் இன்னும் சில விடயங்கள் பகிரங்கத்திற்கு வந்திருக்கும். ஆனால் நீங்கள் அதனைக் குறிப்பிடவில்லை.
சரி இப்போது எனது ஊடக அறிக்கையின் விளக்கத்திற்கு வருவோம்.
கிழக்கு மாகாணத்தில் 5 அமைச்சுக்கள் உள்ளன. இம்மாகாண இனச்சமநிலையைக் கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் இரண்டு தமிழ் அதிகாரிகளும், 2 முஸ்லிம் அதிகாரிகளும், ஒரு சிங்கள அதிகாரியும் செயலாளர்களாக இந்த அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது சொல்லுங்கள் உங்கள் ஆளுநரால் எத்தனை முஸ்லிம் அதிகாரிகள் அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்? ஒரு பதில் செயலாளர் மட்டுமே உங்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சு செயலாளராக அவரை நியமித்திருக்கலாம். அதனைச் செய்வதற்கு கூட உங்களது மாகாண நிர்வாகத்திற்கு மனம் வரவில்லை என்பது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கவலையான செய்தியாகும். இதுவா நியாயமான செயற்பாடு என்பதை உங்களது மாகாண நிர்வாகத்தினால் மீள்பரிசீலனை செய்து பாருங்கள்.
கிழக்கு மாகாணத்தில் மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, போக்குவரத்து அதிகாரசபை, வீடமைப்பு அதிகாரசபை, முன்பள்ளிப் பணியகம், சுற்றுலாத்துறைப் பணியகம் என்பன உள்ளன. இவற்றுக்கான தவிசாளர் நியமனங்களை ஆளுநரே செய்கின்றார்.
இவற்றில் எத்தனை முஸ்லிம் தவிசாளர்கள் ஆளுநரால் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அதனையும் நானே சொல்கிறேன். இந்த 6 சபைகளிலும் இதுவரை வீடமைப்பு அதிகார சபைக்கு மட்டும் முஸ்லிம் ஒருவர் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் எனது ஊடக அறிக்கைக்குப் பின் சமீபத்தில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இம்மாகாண இனச்சமநிலைக்கு முஸ்லிம்களுக்கான இந்த நியமனங்கள் போதுமானது என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்? ஒரு முஸ்லிம் தவிசாளரை நியமிப்பதற்கு எனது ஊடக அறிக்கை வரும் வரை காத்திருக்க தேவைப்பாடு உங்களது மாகாண நிர்வாகத்திற்கு இருக்கின்றது என்பதை என்னென்று சொல்வது. ஏனைய தவிசாளர்களை நியமித்த காலத்தில் முஸ்லிம்களையும் தவிசாளர்களாக நியமித்திருந்தால் ஊடக அறிக்கை விட வேண்டிய எந்தத் தேவைப்பாடும் எனக்கு ஏற்பட்டிருக்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அதேபோல இந்தச் சபைகளுக்கான செயலாளர்கள், பொது முகாமையாளர்கள் போன்ற நியமனங்களும் ஆளுநராலேயே செய்யப்படுகின்றன. இவற்றில் எத்தனை முஸ்லிம்கள் செயலாளர்களாக, பொது முகாமையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லுங்கள். இதுவரை ஒருவருமில்லை.
இப்போது சொல்லுங்கள் கிழக்கு மாகாண மக்களின் இன உறவையும், சகவாழ்வையும் சீர்குழைப்பது நானா அல்லது ஆளுநர் தலைமையிலான உங்களது மாகாண நிர்வாகமா?
எனக்கு பெருவாரியாக வாக்களித்த, நான் பிரநிதித்துவப் படுத்துகின்ற சமுகம் சார்ந்த பிரச்சினைகள் இவை. உங்களால் நியாயமாகச் செய்யப்படாத இந்த விடயங்களை நான் சுட்டிக் காட்டுவதைத் தானே மாகாண நிர்வாகத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாகவும், அவமதிப்பதாகவும் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.
யதார்த்தமான இந்த விடயங்களை நான் பேசுவது எப்படி சமுகங்களின் உறவுக்கும், சகவாழ்வுக்கும் பங்கமாக இருக்கும். எப்படி மாகாண நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்பதை சொல்லுங்கள்.
நீங்களும், உங்களது ஆளுநரும் கிழக்கு மாகாண இனச்சமநிலையைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் கிழக்கு மாகாணத்தில் இன உறவு தானாகவே விருத்தியடையும். எந்த முரண்பாடும் தோன்றாது என்பதை உங்களது ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.
மாகாண நிர்வாகத்தின் இந்தச் செயற்பாடுகளில் இருந்து இன உறவுக்கும், சகவாழ்வுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் என்பதை கிழக்கு மக்கள் ஏற்கனவே புரிந்து கொண்டுள்ளார்கள். நிலைமை நீடிக்குமாக இருந்தால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தக்க பாடம் புகட்டவும் தயாராகுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கிழக்கு மாகாண நிர்வாகச் செயற்பாடுகளில், ஆளுநரின் நியமனங்களில் பேசவேண்டிய இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பேசி நோண்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே முக்கியமான விடயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்படுகின்றேன். அவை எல்லாவற்றையும் பேச வேண்டும் என்று நீங்கள் என்னைத் தூண்டினால் அவற்றை பொதுவெளியில் பேசவும் தயாராக இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் பொதுமக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே ஆளுநருக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன். அவற்றுக்கு 'உங்கள் கடிதம் கிடைத்தது' என்பதாகக் கூட பதிலெதுவும் இதுவரை நான் பெறவில்லை. இதுதான் உங்கள் ஆளுநர் செயலகத்தின் நிர்வாகத் திறனா? ஆனால் ஒரு ஊடக அறிக்கைக்கு உடன் பதில் கிடைக்கின்றது. எனவே, எதிர்காலத்திலும் ஊடக அறிக்கை மூலம் தான் எல்லாம் பேச வேண்டும் அதற்கு மட்டும் தான் பதில் கிடைக்கும் என்றால் அப்படிப் பேசவும் தயாராக இருக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தின் சமுக நிலைகளைக் கவனத்தில் கொண்டு நியாயமாகச் செயற்பட உங்களைக் கடிதம் எழுதப் பணித்த ஆளுநருக்குச் சொல்லுங்கள். ஆளுநரின் நியாயமான சகல செயற்பாடுகளுக்கும் எனதும், எமது கட்சி அமைப்பாளர்களினதும் பூரண ஆதரவை வழங்க என்றும் தயாராக இருக்கின்றேன் என்பதையும் அவருக்குச் சொல்லுங்கள். ஏனெனில் கிழக்கு மாகாணம் எமது சொந்த மாகாணம்.
நீங்கள் சகலரும் மதிக்கின்ற சிரேஸ்ட அதிகாரி என்ற வகையில் உங்களைப் பற்றிய சிறந்த மனப்பதிவு என்னிடம் இருந்தது. எனினும், நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் விட்டதால் என்னை நான் நியாயப் படுத்த வேண்டிய தேவைப்பாடு எனக்கு இருக்கின்றது. எனவே உங்கள் பாணியில் நானும் இக்கடிதத்தை ஊடகங்களுக்கும் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
உங்கள் மீது என்னிடம் பெரும் அபிமானம் இருப்பதால் நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் போது நீங்கள் தானா அதனைத் தயாரித்தீர்கள் என்பதில் இன்னும் எனக்குச் சந்தேகம் உள்ளது.
நான் உங்கள் கடிதத்தினால் தூண்டப்பட்டதால் இந்தப் பகிரங்கப் பதிலை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இக்கடிதத்தினால் உங்களுக்கு ஏற்படும் மன உணர்வுகள் குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.