Our Feeds


Tuesday, July 25, 2023

Anonymous

ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்ததால் முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. - வஜிர அபேவர்தன

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வருவதற்கு முடியுமான வகையில் கட்சியின் புதிய யாப்பு நிர்மாணிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி கலவான தொகுதி அரசியல்சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருக்கிறார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு தொடர்பாகவும் அதில் ஏற்படுத்த இருக்கும்  புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட இருக்கிறார்.

குறிப்பாக நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வருவதற்கு முடியுமான வகையில் கட்சியின் புதிய யாப்பு நிர்மாணிக்கப்பட இருக்கிறது. புதிய உலகுக்கு பாெருத்தமானவகையில்  கட்சியின் புதிய யாப்பை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதேபோன்று நாட்டுக்கு பலத்தை சேர்க்கும் வகையில் கட்சியின் யாப்பு அமையப்பெறும்.

அத்துடன் யாருக்காவது நாட்டை வீழ்த்தவேண்டும் என்றிருந்தால், அவர்கள் செய்யவேண்டியது ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்துவதாகும். ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்ததால் முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தேசத்துக்காக முன்வந்து,, வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

வங்குராேத்து அடைந்திருந்த எமது நாடு இந்தளவு விரைவாக இயல்பு நிலைக்கு மாறி, மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாக கொண்டுசெல்லக்கூடிய நிலை ஏற்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் முதிர்ச்சி மற்றும் திறமையுமே இதற்கு காரணமாகும். மக்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »