Our Feeds


Thursday, July 27, 2023

SHAHNI RAMEES

முல்லைத்தீவில் மகப்பேற்று சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த கொடூரம்...!

 

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது தாய் ஒருவருக்கே இவ்வாறு வயிற்றில் துணியை வைத்து தைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு



கருநாட்டுக்கேணி கிராமத்தைச் சேர்ந்த நாளாந்தம் கூலிக்கு கடற்றொழில் செய்து வருகின்ற குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 34 வயது பெண் தனது மூன்றாவது குழந்தை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 21.05.2023 அன்று சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. இதன் போது பாவிக்கப்பட்ட பருத்தித்துணித் துண்டுகளில் ஒன்றினை மீளவும் எடுக்காது  வயிற்றுக்குளேயே வைத்தியர்கள் வைத்துத் தைத்து அனுப்பிவிட்டார்கள்.



இதன்காரணமாக தீராத கடும் வயிற்று வலிக்குள்ளான பெண் கொக்குளாய் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்குச் சுமார் பத்துத் தடவைகளுக்கும் மேல் சென்று வைத்தியர்களிடம் காட்டியுள்ளார்.க ருநாட்டுக்கேணியிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுமார் 35 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் பிறந்த குழந்தையுடன் மூன்று பெண் குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் தினமும் கூலிக்கு கடற்றொழிலுக்குச் செல்லும் தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அலைந்து திரிந்தாகவும் குறித்த பெண்ணின் கணவர் கவலையுடன் தெரிவித்தார். 



‘சத்திரசிகிச்சை செய்த இடத்தில் துணியின் துண்டு வெளியே தெரிகிறது. சீழ் பிடித்துள்ளது’ எனக் கூறிய போதும் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாதவர்கள் பின்னர் விபரீதத்தை உணர்ந்துகொண்டு 12.07.2023 அன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதித்து மீளவும் வயிற்றில் அதே இடத்தில் வெட்டப்பட்டு உள்ளே விடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் முல்லை மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் 13.07.2023 திகதியில் தாம் எழுதிய கடிதம் ஒன்றை காட்டி அந்தச் சம்பவம் தொடர்பில் தம்மால் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.



இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது ‘அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்தர்.



அவரிடம் ‘தாங்கள் இப்படியொரு கடிதத்தை எழுதியுள்ளீர்களே’ என அவரால் காட்டப்பட்டதாக கூறி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதியை அனுப்பிய போது ‘அது போலிக் கடிதம்’ என ஒரேயடியாக மறுத்து விட்டார்.



இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான கவனயீனச் சம்பவங்களால் மக்கள் உயிராபத்தினை எதிர்கொள்ளாதிருக்கச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மு.தமிழ்ச்செல்வன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »