காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றை நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார், வீட்டிலிருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சாவோடு 55 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போதே வியாபாரத்துக்காக கொண்டுவந்து பதுக்கிவைக்கப்பட்ட ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.