தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை நேற்று (16) உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ. எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக குளியாபிட்டிய பிரதேசத்தின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த குழந்தைக்கு ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த 15ஆம் திகதி நான்கு மாதங்களில் வழங்கப்படவேண்டிய தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், மறுநாள் 16ஆம் திகதி சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குழந்தையின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.