நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் 850 மருந்துகளில் குறித்த மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நாட்டில் 190 மருந்துகளுக்கு மாத்திரம் பற்றாக்குறை நிலவுவதாகவும், வைத்தியசாலைகளில் 90 இற்கும் குறைவான மருந்துகளுக்கே பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
அத்துடன், ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய எதிர்காலத்தில் நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படாதிருக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன், 19 வகைகயான மருந்துகளை உற்பத்தி செய்யவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அடுத்த காலண்டில் மேலும் 17 வகையான மருந்துகளின் உற்பத்தி செயற்பாடுககள் ஆரம்பிக்கப்படுமெனவும், அதன் பின்னர் இரண்டு வருடங்களில் 30 முதல் 35 வீதம் வரையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கிடைப்பதற்கு சுமார் நான்கு மாதங்கள் தேவைப்படுமென சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.