R.Shathurrjan
கடந்த 2010ம் ஆண்டு ஜீலை 22ம் திகதி இலங்கை கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏறத்தாழ 13 வருடங்களாகியும் இவரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
கடந்த 1992 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகிய முரளிதரன் 133 டெஸ்ட் போட்டி மற்றும் 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமல்லாமல் ஒரு நாள் சர்வதேச ஆட்டங்களிலும் முரளிதரனே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2010 இல் இதே நாளில் (ஜீலை 22) டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 800 ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். இது கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்று சாதனையாக அமைந்தது.
2010 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இந்தியாவுடனான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை சுழல் பந்து ஜாம்பவான் அறிவித்திருந்தார்.
அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற மைல்கல்லை எட்ட முத்தையா முரளிதரனுக்கு 8 விக்கெட்டுகளே தேவைப்பட்டன.
2010இல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
800 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டாமலே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு இப்போட்டியானது ஒரு வெற்றிக்கனியாகவே அமைந்தது.
இந்த போட்டித்தொடரில் முதல் நாள் ஆட்டத்தில் முதலாவதாக இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா துடுப்பெடுத்தாடியது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சினின் விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார்.
அந்த விக்கெட்டின் மூலமாக தனது விக்கெட்டுக்களின் எண்ணிக்கையை 793ஆக உயர்த்தினார்.
இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டத்தில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஐந்து விக்கட்டுக்களின் மூலம் 800 விக்கெட்டுக்கள் என்ற மைல்கலை அடைவதற்கு அவருக்கு இரண்டு விக்கெட்டுக்கள் மாத்திரமே தேவைப்பட்டன.
இந்த நோக்கத்தொடு ஐந்தாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கினார்.
ஆரம்பத்திலேயே இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பின்னர் வந்த லக்ஷமன் ரன் அவுட் ஆனதன் காரணமாக இறுதியாக இருந்த ஒரு விக்கெட்டை கட்டாயமாக கைப்பற்றவேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இவருக்கு உருவானது.
இருந்தபோதும் இவரின் திறமையான பந்துவீச்சின் மூலமாக இறுதியாக வந்த ஓஜாவின் விக்கெட்டை கைப்பற்றி உலக வரலாற்றில் முதன் முறையாக 800 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் அவ்வளவு எளிதில் செய்ய முடியாத 800 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல் சாதனையை தனது கடைசி டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்னும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறு ஒரு சாதனையை இனி அடைவது என்பது எந்த பந்துவீச்சாளராலும் அவ்வளவு எளிதில் நினைத்துகூட பார்க்க முடியாத விஷயமாகும். முரளிதரனின் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நன்றி: ஒருவன்