பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ அல்லது பேராயர் ஜெரோம் தற்போது இங்கிலாந்தில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மே 15ஆம் திகதி பயணத்தடை பெறப்பட்டது.
அந்த உத்தரவைப் பெறுவதற்கு முந்தைய நாள் பேராயர் ஜெரோம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது இலங்கைக்கு திரும்பி உள்ளனர்.
பேராயர் ஜெரோமின் மதப் பிரிவு தற்போது உலகில் 12 நாடுகளில் பரவி வருவதாகவும், அந்த நாடுகளில் கிளைகளை வைத்திருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டிற்கு வெளியில் இருந்த போதிலும், பேராயர் ஜெரோம் தனது ஆதரவாளர்களுக்கு ஆன்லைனில் ஆசீர்வாத சேவைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
வங்கிகளில் இருந்து 1200 கோடி…
இதேவேளை, பேராயர் ஜெரோமின் தனிப்பட்ட கணக்குகள், அவரது தனிப்பட்ட வியாபார கணக்குகள், அவர் பிரார்த்தனை நடைபெறும் தேவாலய கணக்குகள் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 9 அரச மற்றும் தனியார் வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆராய கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனுவொன்றை தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தக் கணக்குகள் ஊடாக 1200 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அந்தக் கணக்குகளை ஆராயுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும், இந்த வங்கிக் கணக்குகளில் இருந்து எவ்வளவு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்த நீதிமன்றத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் உள்ள 03 அரச வங்கிகள், 05 உள்ளூர் தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி ஒன்றின் கிளையின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பேராயர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு மேலதிகமாக, சட்டவிரோத சொத்துக் குவிப்புப் பிரிவினரும் பேராயர் ஜெரோம் தொடர்பில் பண மோசடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.