Our Feeds


Sunday, June 18, 2023

Anonymous

VIDEO: மாற்று சமூகத்தினர் முஸ்லிம் சட்டத்தில் கைவைக்கும் முன் உடன்படும் விடயங்களையாவது திருத்துவோமே! - முஷர்ரப் MP

 



அல் - ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் 


பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் அவர்கள் நேற்றைய தினம் ShortNews இன் Short Talk நிகழ்வில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போது முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாமிய சட்டமில்லை எனவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிழையுள்ளது எனவும் முஷர்ரப் எம்.பி கூறுகிறார் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிழையுள்ளது என்றால் அதன் அடிப்படையில் தான் முஷர்ரபின் பெற்றோர்களும் திருமணம் செய்தார்கள் என்பதால் பிழையான சட்டத்தில் மணமுடித்து பிழையாக பிறந்தவரா முஷர்ரப் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்பியுள்ளார். 


முதலில் முஷர்ரப் எம்.பி அவர்கள் இப்படியொரு செய்தியை கூறவில்லை என்பதை குறித்த நேர்காணலை மீண்டுமொரு முறை முபாரக் மௌலவி பார்த்தால் புரிந்து கொள்வார். 


முஸ்லிம் தனியார் சட்டம் என்பது “முஸ்லிம் சட்டம்” இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அல்ல. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முழுமையாக தொகுப்பட்ட ஒன்றுமல்ல என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில அரசியல்வாதிகளும் உணர்வை தூண்டி பேசுகிறார்கள். 


முஸ்லிம் தனியார் சட்டத்தை சரியான முறையில் திருத்துவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் நமக்குள் இருக்கும் முரண்பாடுகள் தான் அதனை திருத்த முடியாமல் தடுத்து விடுகிறது. இம்முறை எப்படியாவது திருத்தி விட வேண்டும். இப்போதாவது இந்தத் திருத்தத்தை நாம் செய்துகொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.


முரண்பட்ட விடயங்களை விட்டுவிட்டு நாம் உடன்படுகிற விடயங்களையாவது வைத்து திருத்தத்தை மேற்கொள்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். 


பெண்களின் ஆகக் குறைந்த திருமண வயது, பெண்கள் சம்மதம் தெரிவித்து கையொப்பமிடும் விவகாரம் உள்ளிட்டவற்றில் தற்போதுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் நிலைபாடுகளினால் சர்வதேச மட்டத்தில் இஸ்லாம் என்பது பெண் அடிமைத்தன மார்க்கம் என்று பேசப்படுகிறது. 


எனவே இந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் உடனடியாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையான திருத்தத்தை செய்ய வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். என்றார் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப்.


முஸ்லிம் தனியார் சட்டம் என்பது 1957 காலப் பகுதிகளில் அப்போதைய தலைவர்களினால் அப்போதைய தேவைக்கு ஏற்ற வகையில் தொகுக்கப்பட்ட ஒன்றே தவிர அது முழுமையாக குர்ஆனையோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலையோ பிரதிபலிக்கும் ஒன்றல்ல என்பதை இலங்கையில் இருக்கும் அனைத்து உலமாக்களும் மிகத் தெளிவாக புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் முபாரக் அப்துல் மஜீத் அவர்களை தவிர.


முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முழுக்க முழுக்க குர்ஆனும் நபிகளாரும் காட்டிய வழிப்படிதான் தொகுக்கப்பட்டிருந்தால் அதில் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்? அது இஸ்லாமிய ஷரீஆ சட்டம் தான் என்றால் அதில் எப்படி மூக்கை நுழைக்க முடியும்? அதுவொரு முஸ்லிம் சட்டம் அதனால் தான் திருத்த வேண்டும் எனக் கூறி திருத்த வேண்டிய பகுதிகளை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையும் கூட பரிந்துரைத்திருக்கிறது. 


நிலைமை இப்படியிருக்க, மொட்டைத் தலைக்கும் முட்டுக்காலுக்கும் முடிச்சுப் போடும் வகையில் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் முஷர்ரப் எம்.பி மீது பொய்யான விமர்சனத்தை அள்ளித் தெளித்திருக்கிறார். 


பேஸ்புக்கில் கட்சி நடத்தி, வட்ஸ்அப்பில் களமாடுபவர்களுக்கு சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி என்ன தெளிவும் புரிதலும் இருக்கப் போகிறது? வேகமாக ஓடும் ரயிலை பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எறுமைக்கு நிகராக இவருடைய எழுத்துக்கள் அமைந்துள்ளன.


ஒரு வாதத்திற்கு முஷர்ரப் எம்.பி தவறாகத் தான் பேசினார் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு மௌலவியாக இப்படியாகத்தான் நடந்துகொள்வதா? உங்களுக்கு சமை நாகரீகமும், சமூக இங்கிதமும் இருக்கிறதா?


முஸ்லிம் தனியார் சட்டத்திலுள்ள சில பிழைகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தையே பிழையாக விமர்சிக்கிறார்கள் அதனை இப்போதாவது சரியான முறையில் திருத்தி சமூக உரிமையை காத்து விட வேண்டும் என்று கூறும் முஷர்ரப் எம்.பி “பிழையாக பிறந்தவர்” என்றால் சமூகத்திற்காக எதையும் செய்யாமல் முகநூலில் கட்சி நடத்தும் முபாரக் மௌலவி மீண்டும் ஒரு முறை மத்ரஸாவுக்கு சென்று படிப்பதே நல்லது!


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »