அம்பாறையின் இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும் அக்குருமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகஹவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கினியாகலயிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரு மாணவிகளும் கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இவர்கள் இருவரும் பதினாறு வயதுடைய மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த இரண்டு மாணவிகளும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது பெற்றோர் இங்கினியாகலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், மீகஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் விஜேதிலகவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு மாணவிகளும் கொழும்பு வந்த பின்னர் மாணவி ஒருவருடன் தொடர்பில் இருந்த இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரைச் சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. கே. விஜேதிலக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.