Our Feeds


Sunday, June 11, 2023

Anonymous

போட்டி போட்டு கிழக்கு ஆளுநரை சந்திக்கும் முஸ்லிம் MP க்கள் - சமூகத்திற்காக என்ன சாதிப்பார்கள்? - விசேட கட்டுரை

 



எம்.எஸ்.தீன் 


கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஏறத்தாழ சமமாக வாழ்கின்றார்கள். இதனால், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களிடையேயும் ஒரு சமாந்தரமான நிலைப்பாட்டினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் புதிய ஆளுநருக்கு இருக்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் வேறுபட்ட கலை, கலாசாரத்தையும், அரசியல் நிலைப்பாட்டையும், பிரச்சினைகளையும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மூவின மக்களையும் அவர்களின் கலை, கலாசார, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அமைவாக கையாள்வது என்பது புதிய ஆளுநருக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாகவுள்ளனர். அதனால், கிழக்கு மாகாண மக்களும், அரசியல்வாதிகளும் புதிய ஆளுநருக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குதல் அவசியமாகும். தம்மால் முடிந்தவரை கிழக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தைக் கொண்டவராக ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளார். ஆயினும், அவர் ஜனாபதியினால் நியமிக்கப்பட்டவர். ஜனாதிபதியின் அபிலாசைகளுக்கு மாற்றமாக செயற்பட முடியாதென்ற உண்மை அவரது மக்கள் சேவை பணிக்கு தடையாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்திற்கு தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இலகுவாக ஆளுநருடன் உரையாடவும், கருமத்தை முடித்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். கிழக்கு மாகாணத்திற்கு ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது தமிழ் அரசியல்வாதிகளில் ஒருசிலர் கருப்பு ஆடைகளை அணிந்து கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். 

இந்த செயற்பாடு அரசியல் பின்னணியைக் கொண்டது. முஸ்லிம் எதிர்ப்பு கோசங்களின் மூலமாக பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பேரினவாதிகளின் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஒரு சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான நடவடிக்கைகளை தற்போதைய ஆளுநர் நியமனத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளக்கூடாது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ், பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்திட்ட போதிலும் சிங்களவர்களே ஆளுநராக நியமிக்கப்பட்டனர். வரலாற்றில் முதற் தடவையாக தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் தமிழர் ஒருவரோ அல்லது முஸ்லிம் ஒருவரோதான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இதனை எல்லாக் காலங்களிலும் உறுதி செய்யும் வகையில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். 

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் ஆளுநரைச் சந்தித்து போட்டோக்களை சமூக வலைத்தளஙகளில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்திப்பதில் போட்டி அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுநரை சந்திப்பதனாலோ, படங்களைப் பதிவேற்றம் செய்வதனாலோ கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது ஆளுநர் மனது வைத்தால் மாத்திரம் போதாது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினது அங்கிகாரம் இருந்தால் மாத்திரமே திர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

வெறுமனே ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பேசாது ஊமைகள் போல இருந்து கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஒரு போதும் பெற்றுக் கொள்ள முடியாது. 

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ஆளுநர் மூலமாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய திறவுகோல் ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும்தான் இருக்கின்றது. அதனால், அமைச்சர் பதவிகளுக்கும், வேறு தனிப்பட்ட தேவைகளுக்கும் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக்கொண்டு மௌனித்து இருப்பது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். 

நாளைய சமூகம் துரோகிகள் என்று வரலாற்றில் அடையாளப்படுத்தாது இருப்பதற்கு சமூகப் பொறுப்புடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் செயற்பட முன்வருதல் வேண்டும். 

கிழக்கு மாகாணத்திற்கு இதற்கு முதலும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வேளைகளில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்கள் என்றும், பிரதி அமைச்சர்கள் என்றும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். 

ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணவில்லை. அதேவேளை, ஆளுநர்கள் பெரும்பான்மையினருக்கு சாதகமாகவும், தமிழ், முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை பௌத்த தொல்பொருள் பிரதேசங்கள் என்ற பேரில் பறிமுதல் செய்வதற்கும் ஆதரவாக செயற்பட்டுள்ளனர். இதன் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. மௌனமாகவே இருந்தார்கள். 

இவ்வாறு நடப்பது நடக்கெட்டும் என்ற தோரணையில் இருந்தவர்கள்தான் தற்போது ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் படம் காட்டும் அரசியலை கைவிட வேண்டும். 

முஸ்லிம்களும் இந்த படம் காட்டும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது மட்டும் நமது கடமையல்ல. நமது வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர்களை கண்காணிப்பதும் நமது கடமையென எண்ணிச் செயற்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்த வேண்டும். 

அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட மூலமொன்றை நிறைவேற்ற இருக்கின்றது. அது குறித்து சிங்கள, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயத்திலும் மௌனமாகவே இருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களும், கட்சிகளின் தலைவர்களும் மதில் மேல் பூனையாக இருப்பதாகவே தென்படுகின்றன. எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுந் தரப்புக்கு ஆதரவாகவே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் ஆளுந் தரப்பினரது கருத்துகளையும், எதிர்க்கட்சியினரின் கருத்துக்களையும் ஊமைகள் போன்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மூலமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய வழிவகைளை மத்திய அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் அதிகாரங்களின் ஊடாக ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதற்கில்லை. கிழக்கு மாகாண ஆளுநர் மூலமாக தமது சுயதேவைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாமென்று மாத்திரமே சிந்திப்பார்கள் என்பதே கடந்த கால அனுபவமாகும்.

நன்றி: வீரகேசரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »