முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச கூறிய விடயம் தொடர்பில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கோரிக்கைக் (Letter Of Demand) கடிதமொன்றை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பியுள்ளார்.
விமல் வீரவன்சவின் புதிய புத்தக வெளியீட்டு விழாவின் போது அவர் மேற்படி விடயத்தை கூறியிருந்தார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்திற்கு சவேந்திர சில்வா உடந்தையாக இருந்ததாக விமல் வீரவன்ச பொய்யானதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, சவேந்திர சில்வாவின் சட்டத்தரணிகள் அனுப்பி வைத்துள்ள கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஒன்பது: மறைக்கப்பட்ட கதை’ எனும் தலைப்பில் விமல் வீரவன்ச எழுதிய புத்தகத்திலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற – குறித்த புத்தக வெளியீட்டு விழாவின் போது, விமல் வீரவன்ச ஆற்றிய உரையிலும் சவேந்திர சில்வா குறித்து மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சலகுன’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் மேலும் பல சந்தர்ப்பங்களிலும், விமல் வீரவன்ச எம்.பி – இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஜெனரல் சவேந்திர சில்வா தனது நஷ்டஈட்டுக் கோரிக்கைக் கடிதத்தில், தனக்கும் இலங்கை ராணுவத்துக்கும் எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார்..
ஜெனரல் சவேந்திர சில்வாவுக்குக் களங்கம் ஏற்படுத்தவும், சுமார் 40 வருடங்களாக தேசத்துக்கு அவர் செய்த கறைபடியாத சேவைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கத்துடனும் விமல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு வெளியிடப்பட்டதாகக் அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.