Our Feeds


Sunday, June 18, 2023

Anonymous

BREAKING: மீண்டும் களமிறங்குகிறது தேர்தல்கள் ஆணைக்குழு - தேர்தலை நடத்த முயற்சி!

 



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கேட்டு திறைசேரி செயலாளரிடம் அடுத்த வாரம் மற்றுமொரு கோரிக்கையை விடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

 

நாட்டின் பொருளாதார நிலை நல்ல நிலையில் இருப்பதாக அரசாங்கமே அறிக்கைகளை வெளியிடுவதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் முன்னர் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக பணத்தை வழங்க முடியாது என திறைசேரி செயலாளர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

 

அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் நாம் வினவிய போது, ​​வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெறும் பிரேரணையால் இவ்வாறானதொன்றை செய்துவிட முடியாது எனவும் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

 

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான தபால் மூல வாக்குகள் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது அரசு அச்சகத்தின் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்ட போதிலும், அந்தத் தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களுக்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக.நிமல் ஜி.புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »