(எம்.மனோசித்ரா)
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான 'வாகீர்' இன்று திங்கட்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி வரை வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.
சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பை நினைவு கூரும் வகையில் , 'உலகலாவிய பெருங்கடல் வலயம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கப்பல் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் திவாகர். எஸ் இலங்கையின் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்கவுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு இக்கப்பலை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுவாமி விவேகானந்தா கலாசார மையத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்கேற்புடன் ஒரு மாபெரும் நிகழ்வை புதன்கிழமை (21) கொழும்பு துறைமுகத்தில் ஏற்பாடு செய்ய உள்ளது.
அண்மையில் சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் ஐந்து நகரங்களில் மூன்று நாள் யோகா பயிற்சிப் பட்டறையில் இலங்கை ஆயுதப் படைகள் பங்கேற்றன.
இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு வருகை தருவது, அண்டை நாடுகளுக்கு முதலில்' கொள்கை மற்றும் 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' என்ற இந்தியாவின் பார்வைக்கு ஏற்ப இரு அண்டை கடற்படைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.