பாணந்துறையில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றுக்கு முன்பாக 23 வயதுடைய இளைஞர் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவன் கொலையை செய்த பிரதான சந்தேக நபருக்கு உதவுவதற்காக அவருடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வெகட பிரதேசத்தில் கடந்த மே 31ஆம் திகதி இரவு இளைஞரொருவர் கொல்லப்பட்டார்.
பாணந்துறையில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஆடை தொழிற்சாலை வளாகத்துக்குள் ஓடியுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்த கொலையாளி, ஆடை தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைந்து, அந்த இளைஞரை வாளால் தாக்கிய விதமும் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
மேபதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.