(றிப்தி அலி)
2023ம் ஆண்டுக்கான அரச ஹஜ் குழுவிற்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்துமூல முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை மேற்கொள்ளச் செல்லும் யாத்திரிகர்களின் நலன்களை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வருடம் சவூதி அரேபியா செல்வது வழமையாகும். எனினும், கொவிட் பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியன காரணமாக 2019ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இந்த வருடமே அந்த வாய்ப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இரு ஆண் உத்தியோகத்தர்களும் பெண் யாத்திரிகர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக பெண் உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுவது வழக்கமாகும். எனினும் இம் முறை பெண் உத்தியோகத்தருக்கு வாய்ப்பளிக்கப்படாது மூன்று ஆண் உத்தியோகத்தர்களே அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பெண் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களை கவனிப்பதற்கு இம்முறை யாருமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக வருடாந்தம் அனுப்பப்பட்டு வந்த பெண் ஹஜ் யாத்திரிகர்களுக்கான நலன்புரி உத்தியோகத்தர் இந்த வருடமே முதற் தடவையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல், அரச தொழில் நியமனம் பெற்று இதுவரை நிரந்தரமாகாத, இரண்டு வருடங்களே பூர்த்தியான கனிஷ்ட உத்தியோகத்தர் ஒருவரும் இம்முறை ஹஜ் நலன்புரி உத்தியோகத்தராக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்தே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இவ் விவகாரம் தொடர்பில் புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி விரைவில் தீர்வொன்றினை வழங்குவேன்” என தெரிவித்தார்.
அது மாத்திரமல்லாமல், எதிர்காலத்தில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இலவசமாக உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்கான விசேட திட்டமொன்றினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த வருடம் இலங்கையிலிருந்து 900 பேர் மாத்திரமே ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றமையினால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எவரையும் ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என நானே உத்தரவிட்டேன்.
எனினும், இந்த வருடம் இலங்கையிலிருந்து 3,500 பேர் ஹஜ் யாத்திரைக்குச் செல்கின்றமையினால் அவர்களின் நலன்களைப் பேணுவதற்கு அதிக எண்ணிக்கையானோர் தேவை. இதனால், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து அவர்களைச் செல்ல அனுமதி வழங்கியுள்ளேன்” என்றார்.- Vidivelli