Our Feeds


Friday, June 2, 2023

ShortNews Admin

கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி, அபிவிருத்தி விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முஷாரப் வேண்டுகோள்!



கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கேட்டுக்கொண்டார்.


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரபிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான சந்திப்பு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்றபோது அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜனாதிபதிப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை மீட்டுவரும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநரின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிறுபான்மையினக் கட்சி ஒன்றின் தலைவரான தாங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், கிழக்கு மக்களும் இதனை பெரிதும் ஆதரித்துள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக தற்காலிக, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இக்கோரிக்கையை நானும் விரும்புகின்றேன். அதற்கான அனுமதி மத்திய அரசாங்கத்தினால் கிடைக்கும்போது அதனை விரைவாகச் செய்வேன். இதற்கான அனுமதி கிடைப்பதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை பாராளுமன்ற உறுப்பினரிடம் கிழக்கு மாகாண அளுநர் கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாகவும், மக்களுக்கான பணியில் மிக வேகமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் முஷாரப் எம்.பி இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஆளுநருடனான இச்சந்திப்பில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ்.முபாரக், அன்வர் சதாத், பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »