வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும்,சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில் எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து,இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும்,இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.