Our Feeds


Wednesday, June 7, 2023

SHAHNI RAMEES

ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனை பிணவறையிலிருந்து உயிருடன் மீட்ட தந்தை...!

 

ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனைத் தேடி 230 கி.மீ. பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்த அவரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

கடந்த 2ஆம் திகதி ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியதில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

இதையடுத்து, அந்த ரயில்களில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர். தங்களுடைய அன்புக்குரியவர்கள் இறந்தார்களா அல்லது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களா என கண்டுபிடிக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

 

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சிறிய கடை நடத்தி வரும் ஹெலராம் மாலிக் என்பவரின் மகன் விஸ்வஜித் (24) கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

 

இதனிடையே, விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலராம் தனது மகன் விஸ்வஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

 

அப்போது, தான் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உடைந்த குரலில் விஸ்வஜித் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, ஹெலராம் தனது உறவினர் தீபக்தாஸுடன் ஒரு அம்புயூலன்ஸ் வாகனத்தில் பாலசோர் விரைந்துள்ளார். 230 கி.மீ. பயணத்துக்குப் பிறகு காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று விஸ்வஜித்தை தேடி உள்ளார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இதனிடையே இதுகுறித்து சிலரிடம் விசாரித்தபோது, காயமடைந்தவர் மருத்துவமனைகளில் இல்லையென்றால், சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாஹநாகா உயர்நிலைப் பள்ளிக்கு சென்று தேடிப் பாருங்கள் என ஒருவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

 

ஆனால் தன் மகன் உயிரிழந்திருப்பார் என அவர்கள் கூறியதை ஹெலராம் ஏற்கவில்லை. எனினும் அங்கு சென்று தேடினார். அப்போது ஒரு உடலில் இருந்து கை அசைவதை ஹெலராம் பார்த்தார். அது வேறு யாருமல்ல. அவருடைய மகன் விஸ்வஜித்தான்.

 

சடலங்களுக்கு மத்தியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மகனை உடனடியாக பாலசோர் மருத்துவமனைக்கு அம்புயூலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றார் ஹெலராம். எனினும், கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஸ்வஜித்தை அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

 

ஆனால், தனது மகனை டிஸ்சார்ஜ் செய்யுமாறு ஹெலராம் கோரிக்கை வைத்தார். பின்னர் தனது மகனை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

 

அங்கு விஸ்வஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »