Our Feeds


Sunday, June 18, 2023

Anonymous

ஜெனிவா கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம் : இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கை புதனன்று வாசிக்கப்படும்

 



(நா. தனுஜா)


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை புதன்கிழமையன்று அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. 

அதுமாத்திரமன்றி, அக்கூட்டத் தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரில் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல உரை இடம்பெறவுள்ளது. 

இதன்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து முறையே எழுத்துமூல அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »