Our Feeds


Sunday, June 18, 2023

Anonymous

குருந்தூர், திரியாயவில் பௌத்தர்கள் அல்லாதோரை குடியேற்ற முடியாது - எல்லாவல மேதானந்த தேரர்!

 



ஆர்.ராம்


வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே தமிழ் மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவதற்காக அவர்கள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரும் பாவத்தை செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதை தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் நடத்திய சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்த தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்கவிடத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பேராசிரியர் அனுர மனதுங்க பதவி விலகியுள்ள நிலையில், எல்லாவல மேதானந்த தேரர் குறித்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதமொன்றை கடந்த 13ஆம் திகதி அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த காணிகளை வழங்கப்போவதில்லை என்றும் காணிகள் பற்றிய விடயத்தினை முழுமையாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் தேரருக்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்து விகாரை மற்றும் திரியாய விகாரை தொடர்பில் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவான கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். அதன் பின்னர் அவரது செயலாளர் ஊடாக பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் பிரகாரம் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் பின்பற்றப்படும் என்றும் நம்புகின்றேன். 

மேலும், குழு அமைத்து ஆராய்வதற்கு எந்தவொரு சர்ச்சையான விடயங்களும் அங்கு இல்லை என்பதை இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.

நான் குருந்து மலைக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளேன். அங்கு வரலாற்றில் பல தம்மபத வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. ஆகவே, அந்த புராதன விகாரைக்குச் சொந்தமான பாரியளவிலான நிலங்கள் காணப்படாமல் அவ்விதமான வழிபாடுகளைச் செய்ய முடியாது.

மேலும், புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அந்தச் சின்னங்கள் உலக மரபுரிமைகளாக மதிக்கப்பட வேண்டியவை. அவ்வாறான நிலையில், குருந்து மலையைச் சூழவுள்ள நிலங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவது பொருத்தமற்ற செயற்பாடாகும். அதனை வழங்காதிருப்பது தான் மிகச் சரியான விடயமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. நான் கூட அந்த மக்களை நேரில் சென்று பார்த்து உதவிகளை வழங்கிய ஒருவர் தான். ஆனால், அவர்களுக்கு காணிகள் தேவையாக இருந்தால் பிறிதொரு இடத்தில் வழங்க முடியும். அதற்குரிய வசதிகளும் முல்லைத்தீவில் காணப்படுகின்றன.

உண்மையில் குருந்து மலையை சூழவுள்ள காணிகளை தமிழ் மக்கள் கோரவில்லை. அதனைக் கோருவது தமிழ் அரசியல்வாதிகள் தான். இவர்கள் தான் திரியாய விகாரைக்குச் சொந்தமான காணிகளையும் கோருகின்றார்கள். திரியாயவும் புத்தபெருமானுடன் நேரடியாக தொடர்புபட்ட வரலாற்றுப் பிரதேசமாகும்.

அவ்வாறு இருக்கையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த புராதன இடங்களை சிதைக்கும் வகையில் காணிகளை கோருகின்றார்கள். இவர்கள் உண்மையிலேயே பிரிவினையைக் கோரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதையிலேயே செல்கின்றார்கள். அந்த தவறான பாதையில் தான் தமிழ் மக்களையும் கொண்டு செல்வதற்கு முனைகின்றார்கள்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் மிகவும் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். 

இந்த நாட்டில் மீண்டும் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் மக்களுக்காக காணிகளை கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் அந்த மக்களுக்காக எதனையும் செய்யவே இல்லை. அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிகளை வழங்காது, அந்த மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி பிரிவினை அரசியல் செய்வதற்கே முனைகின்றார்கள்.

அதேநேரம், பௌத்தர்கள் அல்லாத எவரையும் பௌத்த விகாரைகளை சூழவுள்ள பகுதிகளில் குடியேற்றுவதையோ வசிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அது பௌத்த தர்மத்துக்கு முரணான செயற்பாடாகும்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெளத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் கைவைத்து பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி பெரும் பாவத்தை செய்யக்கூடாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »