Our Feeds


Sunday, June 18, 2023

Anonymous

அணுமின் உற்பத்தி நிலையங்களை இலங்கையில் அமைக்கும் முயற்சியில் ரஷ்யா!

 



சுபத்ரா

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் இந்தியா ஏற்கனவே காலடி எடுத்து வைத்திருந்த நிலையில், இப்போது, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளும் நுழைந்திருக்கின்றன. இந்த நிலையில் அணுமின் உற்பத்தி நிலையங்களை இலங்கையில் அமைக்கும் முயற்சிகளை ரஷ்யாவும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மின்சாரமும், எரிசக்தியும் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்பது பொதுவான கருத்து. பொருளாதார நெருக்கடிக் காலத்தில் இந்த இரண்டுக்கும் மக்கள் பட்டபாடு அனைவருக்கும் தெரியும். எரிசக்தி மற்றும் மின்சக்திக்கான மூலங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், டொலர் நெருக்கடி ஏற்பட்ட போது அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது மிகமோசமான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதுபோல, எரிபொருள் விநியோகமும் கிட்டத்தட்ட குறிப்பிட்ட காலத்துக்கு முடங்கிப் போனது. எல்லாத் தொழில்துறைகளையும் அது மோசமாகப் பாதித்தது. இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அதற்காக இருவேறு நகர்வுகளை இப்போது முன்னெடுத்திருக்கிறது. ஒன்று, முன்னர் இந்தியாவுடன் மட்டுமே எரிபொருள் விற்பனைச் சந்தையைப் பங்கு போட்டுக் கொண்டிருந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இப்போது சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்க, அவுஸ்ரேலிய நிறுவனங்களுடன்  தமது கூட்டாண்மையை விரிவுபடுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஐஓசி நிறுவனம் இலங்கையில் சீனக்குடா எரிபொருள் களஞ்சியத்தை பராமரித்து வருகின்ற அதேவேளை, 211 எரிபொருள் விற்பனை நிலையங்களையும் பராமரித்து வருகிறது. ஆனாலும், அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது, லங்கா ஐஓசி எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்கு போதுமான பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.

எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கத்துக்கு கடன் உதவிகளை இந்தியா வழங்கியது. நெருக்கடி காலத்தில் 4 பில்லியன் டொலர் வரை இந்தியாவினால் வழங்கப்பட்டது. எனினும் ஒரு கட்டத்தில் பெற்றோலிய இறக்குமதிக்காக இலங்கை கடன் கோரிய போதும் இந்தியா அதனை வழங்கவில்லை. அதனால் எரிபொருள் இறக்குமதி முற்றாகத் தடைப்பட்டது. அந்த தருணத்தில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மூலம் இந்தியா அதிகளவில் எரிபொருள் விற்பனையை முன்னெடுத்திருக்கலாம்.

ஆனால் இந்தியா அதனைச் செய்யத் தவறி விட்டது. இந்த நிலையில் தான் சீன, அமெரிக்க, அவுஸ்ரேலிய நிறுவனங்களை எரிபொருள் சந்தைக்குள் இழுத்து வந்திருக்கிறது அரசாங்கம். இந்தியாவுக்கு இடமளிக்கப்பட்டதால் சீனாவுக்கும் இடமளிக்கப்பட்டது. சீனாவுக்கு வழங்கப்பட்டதால், அமெரிக்காவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எரிசக்தி சந்தை வழங்கலிலும் பிராந்திய, சர்வதேச அரசியல் போட்டியின் தாக்கத்தை உணர முடிகிறது.

மே 22ஆம் திகதி சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, அந்த நிறுவனம் எரிபொருளை இறக்குமதி செய்து, களஞ்சியப்படுத்தி, விநியோகம் செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்த 150 விற்பனை நிலையங்கள் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 50 எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கும் சினோபெக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட 45 நாட்களுக்குள் இந்த நிறுவனம் விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்கும். 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் படி, ஒரு மாதத்துக்கான எரிபொருள் கையிருப்பை பேண வேண்டும். இதே நிபந்தனை, அமெரிக்க, அவுஸ்ரேலிய நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆர்எம் பார்க் நிறுவனம், ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 150 விற்பனை நிலையங்களுடன், 50 புதிய நிலையங்களையும் அமைக்கவுள்ளது.

ஜூன் 8 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டுக்கு அமைய, எரிபொருள் விற்பனை நிலையங்களை மாத்திரமன்றி, சிறியளவிலான வணிகச் சந்தையிலும் அமெரிக்க நிறுவனம் நுழையவுள்ளது. அதுபோல அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெற்றோலியம் நிறுவனமும் இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் நுழைகின்றது. இதன் ஊடாக எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இந்த நிறுவனங்களின் கையிருப்பை கொண்டு நிலைமையை சமாளிக்கலாம் என்பதே அரசாங்கத்தின் கணக்கு. எரிபொருள் சந்தையை பல்வேறு நாடுகளுடன் பங்கு போட்டுள்ள அரசாங்கம் அடுத்ததாக, ரஷ்யாவின் உதவியுடன் இரண்டு அணுமின் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவின் ரொசார்டம் (Rosatom)  என்ற அணுசக்தி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வந்தது.

இலங்கையில் அணுமின் நிலையங்களை அமைக்கும் யோசனை குறித்து பல ஆண்டுகளாகவே ரஷ்யா பேச்சுக்களை நடத்தியது. முன்னைய ரஷ்யத் தூதுவரே இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்தார். தற்போதைய தூதுவர் Levan Dzhagaryan கொழும்பில் பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு தலா 55 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளைக் கொண்ட அணுமின் நிலையத்தை அமைக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் ரொசார்டம் நிறுவனத்தின் அதிகாரிகளும் இலங்கைக்கு வந்து பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர். இந்தப் பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே, தெரிவித்துள்ளார். அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான அனுமதிகளை அரசாங்கம் விரைவாக வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கிலேயே இந்த அணுமின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசாங்கம் தற்போது மின்சார உற்பத்திக்காக, எரிபொருள் மற்றும் நிலக்கரியில் அதிகம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை  மின்திட்டங்கள் இன்னமும் சரியாக செயற்படாத நிலையில் கடும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த ஆண்டில் மிக மோசமான மின்வெட்டு்ப பிரச்சினையையும் நாடு எதிர்கொண்டது. இது உற்பத்தித் துறையை பெரிதும் பாதித்தது. இவ்வாறான நிலையில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுமின் திட்டங்களின் பக்கம் அரசாங்கம் சாயத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் கூடங்குளத்திலும், பங்களாதேசில் ரூப்பூரிலும் அணுமின் நிலையங்களை அமைத்திருக்கும் ரஷ்யாவின் ரொசார்டம்  நிறுவனம் மியான்மாரிலும், இலங்கையிலும், கிர்கிஸ்தானிலும் புதிய அணுமின் நிலையங்களை அமைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்,Alexey Likhachev  தெரிவித்திருக்கிறார். இந்த நிறுவனம் ஏற்கனவே துருக்கி, ஈரானிலும் அணுமின் நிலையங்களை அமைத்திருக்கிறது.

இலங்கை அணுமின் திட்டத்தில் ஆர்வம் காட்டும் நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்ய நிறுவனம் இலங்கையில் அணுமின் நிலையங்களை அமைத்தால், இலங்கைத் தீவின் சக்தி துறையில் ரஷ்யாவின் செல்வாக்கும் அதிகரிக்கும். இலங்கையின் அணுமின் நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. அது இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

மிதக்கும் அணுமின் நிலையங்களை அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. தரையில் நிரந்தர அணுமின் நிலையத்தை அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. அது வடக்கு, கிழக்கை அண்டிய பகுதிகளில் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. ஏற்கனவே பிராந்திய அரசியல் போட்டி தீவிரம் பெற்றுள்ள நாட்டில், இது நிலைமைகளை இன்னும் மோசமாக்க கூடும்.

சக்தி முதல்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதன் மூலம், இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்த பல நாடுகள் முனைகின்றன. ஆனாலும் தனி ஒரு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க இலங்கை பல நாடுகளை உள்ளே கொண்டு வருகிறது. இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »