சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திலிருந்து தான் விலகப் போவதாகக் கூறப்படுவதை போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுத்துள்ளார். அத்துடன் லயனல் மெஸி மற்றும் கரீம் பென்ஸிமா ஆகியோர் சவூதி அரேபியா கழகங்களில் விளையாடுவதை தான் வரவேற்பதாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருடகால ஒப்பந்தத்தில் அல் நாசர் கழகத்தில் கடந்த ஜனவரியில் ரொனால்டோ இணைந்தார். இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 200 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகின.
சவூதி ப்ரோ லீக் ப்ரோ லீக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட்டிலிருந்து நடைபெற்ற நிலையில், ஜனவரியில் இணைந்த ரொனால்டோ அல் நாசர் சார்பில் 16 போட்டிகளில் 14 கோல்களைப் புகுத்தினார். எனினும் அக்கழகம் இரண்டாமிடத்தையே பெற்றது. அல் இத்திஹாத் கழகம் சம்பியனாகியது.
இந்நிலையில் அல் நாசர் கழகத்திலிருந்து 38 வயதான ரொனால்டோ விலகக்கூடும் என செய்திகள் வெளியாகின. மீண்டும் ஐரோப்பிய கழகமொன்றில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால், ரொனால்டோ இதை நிராகரித்துள்ளார்.
சவூதி ப்ரோ லீக்கின் உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தளங்களுக்கு அளித்த செவ்வியின்போது இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ரொனால்டோ கூறுகையில்,
'நான் இங்கு நீடிக்க விரும்புகிறேன். இங்கு தொடர்ந்து விளையாடுவேன். அடுத்த பருவக்காலத்தில் நாம் மேலும் சிறப்பாக இருப்போம். கடந்த 5, 6 மாதங்களில் முன்னேறியுள்ளோம். விரைவில் நாம் சம்பியன் பட்டங்களை வெல்ல முடியும் என நம்புகிறேன்' என்றார்.
சவூதி ப்ரோ லீக் குறித்து ரொனால்டோ கூறுகையில், 'இந்த லீக் சிறப்பாக உள்ளது என நான் எண்ணுகிறேன். ஆனால், இன்னும் முன்னேறுவதற்கு எமக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மிகச் சிறந்த அணிகள், மிகச் சிறந்த அரேபிய வீரர்கள் உள்ளனர். உட்கட்டமைப்பு, வீடியோ உதவி மத்தியஸ்தர் முறைமை (வீஏஆர்) போன்றவை மேலும் சற்று அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என எண்ணுகிறேன். அவை விரைவாக செய்யப்பட வேண்டும்' என்றார்.
'எனது கருத்தின்படி, அவர்கள் செய்ய விரும்புவதை தொடர்ந்து செய்தால் 5 வருடங்களில் உலகின் 5 ஆவது மிகச்சிறந்த லீக்காக இந்த லீக் விளங்கும்' எனவும் ரொனால்டோ கூறினார்.
இதேவேளை, ரொனால்டோவின் பரம வைரியாக கருதப்படும் ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி, சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்திலும், பிரெஞ்சு வீரர் கரீம் பென்சிமாக சவூதியின் அல் இத்திஹாத் கழகத்திலும் இணையக்கூடும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ரொனால்டோ கருத்துத் தெரிவிக்கையில், சவூதி ப்ரோ லீக்கில் இவ்வீரர்களைக் காண்பதில் தான் மகிழ்ச்சியடையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். 'அவர்களை வரவேற்கிறேன். (அவர்களால்) இந்த லீக் முன்னேற்றமடையும். தற்போது இங்கு மிகச்சிறந்த அரேபிய வீரர்கள் உள்ளனர்' என ரொனால்டோ கூறினார்.