ஏ.ஆர்.ஏ.பரீல்
இவ்வருட ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகளின்போது, ஏற்கனவே 2013ம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டமை உட்பட மேலும் பல காரணங்களை முன்வைத்து நான்கு ஹஜ் முகவர்கள் அரச ஹஜ் குழுவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த மாதம் 22ம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி உயர்நீதிமன்றம் ஆராயவுள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹாதி டிரவல்ஸ், கன்ஸுல்லா டிரவல்ஸ், எச்.எம்.எச். டிரவல்ஸ், அல் உமைரா டிரவல்ஸ் ஆகிய முகவர் நிலையங்களே உயர் நீதிமன்றில் இம்மனுவினை தாக்கல் செய்துள்ளன.
உயர்நீதிமன்றில் SC-/FR/142/2023 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஹாதி டிரவல்ஸ் உரிமையாளர் என். சுபைல் முஹம்மட் ‘விடிவெள்ளி’க்கு விளக்கமளிக்கையில்,
"அரச ஹஜ் குழு எம்மை இவ்வருடத்துக்கான ஹஜ் முகவராக தெரிவு செய்திருந்தும் எமக்கு ஹஜ் கோட்டா வழங்க மறுத்தமை, ஹஜ் முகவராக தெரிவு செய்யப்பட்டிருந்தும் முகவர் நியமனம் தொடர்பில் 2023.04.28ம் திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலில் 81 முகவர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே இடம் பெற்றமை, எங்களது பெயர் விபரங்கள் பிரசுரிக்கப்படாமை, இதன் காரணமாக 30 வருடகால எங்கள் முகவர் நிலைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டமை மற்றும் ஹஜ் பயணத்துக்கு எம் முகவர் நிலையத்தில் பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் இதனால் பதிவினை ரத்து செய்ததால் பாரிய நஷ்டம் ஏற்பட்டமை ஆகிய காரணங்களை முன்வைத்து நீதிமன்றுக்கு மனுதாக்கல் செய்துள்ளோம்.
இதேவேளை நாம் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஹஜ் குழு 2023.05.10ம் திகதி எமது முகவர் நிலையங்களின் பெயர்களையும் உள்ளடக்கி 104 முகவர் நிலையங்களின் பெயர் பட்டியலை பத்திரிகையில் விளம்பரம் செய்தது.
இதேவேளை ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் விண்ணப்பமொன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளோம்" என்றார்.