ஒருகொடவத்தை - அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒருகொடவத்தை - அம்பத்தளை வீதி (Low level Road) புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை விடுத்தார்.
வெளிநாட்டு உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முழுமையான வீதியின் நீளம் 7.7 கி.மீ ஆகும். 2023 மே மாத நிலவரப்படி, இதன் முதல் கட்ட நிர்மாணப் பணிகளின் பௌதீக முன்னேற்றம் 85% ஆகவும், இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் பௌதீக முன்னேற்றம் 80% ஆகவும் உள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2020 ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த நிலையில், குறித்த ஒப்பந்ததார நிறுவனத்தின் சிக்கல்களினால், இத்திட்டப் பணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான நட்டஈடு வழங்கல், குறித்த வீதியில் பொறுத்தப்பட்டுள்ள நீர் குழாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாலும் மேலும் பல்வேறு பொதுவான பிரச்சினைகளாலும் குறித்த திட்டத்தினை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாமல் போனமை தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள், குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.