Our Feeds


Wednesday, June 7, 2023

ShortNews Admin

எம்.பி. ஒருவரை பொலிஸார் கைது செய்ய முடியாது - கஜேந்திரகுமாரின் சிறப்புரிமையை பொலிஸார் மீறியுள்ளனர் - சஜித் பிரேமதாச



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து அவரின் சிறப்புரிமையை  பொலிஸார்  மீறியுள்ளனர்.  பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ள எம்.பி. ஒருவரை பொலிஸார் கைது செய்ய முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை  முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள உரிமை இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையில் அந்த உரிமை இருக்கிறது. என்றாலும் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அத்துடன் வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக,  சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக  பாராளுமன்றத்துக்கு வந்து உரையாற்ற உரிமை இருக்கிறது.  அதேநேரம், பாராளுமன்றத்துக்கு வந்து, சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்குவதாக அவர் பொலிஸாருக்கும் தெரிவித்திருக்கிறார் சபாநாயகராகிய உங்களுக்கும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்யும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ  2015 மார்ச் மாதம் 3ஆம் திகதி வழங்கிய மிகவும் தெளிவான தீர்ப்பொன்று இருக்கிறது. அதனை நினைவூட்டுகின்றேன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பாகவும் அவரின் கொள்கை தொடர்பாகவும் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த சபைக்கு வருவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. பாராளுமன்ற சபை அமர்வுக்கு வரும்போது அவரை கைதுசெய்ய முடியாது. அதனால் சபாநாயகராகிய நீங்கள், உடனடியாக சட்டப்பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கி, பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »