டைடானிக் கப்பலின் மூழ்கியு்ள பாகங்களை பார்க்க நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்த 5 பேரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள்.
டைடன் நீர்மூழ்கியின் அழிவைத் தொடர்ந்து குறித்த தந்தையும் மகனும் தற்போது பேசப்படுகிறார்கள்.
பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார்.
தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவர்கள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது.
ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்.
ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார்.
அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார்.
நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார்.