Our Feeds


Saturday, June 24, 2023

SHAHNI RAMEES

கோட்டபாய மீது புதிய குற்றச்சாட்டு...!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய 1989ஆம் ஆண்டு, ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில், கண்டுபிடிக்கப்பட்ட, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்கும் வகையில்,  பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



குறித்த பகுதிகளில், கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்டதில், நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும், அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இந்தநிலையில், இன்னும் பல்லாயிரக்கணக்கான மனித எச்சங்கள், கண்டுபிடிக்கப்படாத புதைகுழிகளில், தோண்டப்படாமல் இருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எவையுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய முன்வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.



குறித்த மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.



பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சட்டத்தரணிகள் குறித்த இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.



அத்துடன் உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.



2013ஆம் ஆண்டு மாத்தளையில் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியின் காவல்நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து பொலிஸ் பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக குறித்த அறிக்கை கூறுகிறது.



இந்தநிலையில் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »