Our Feeds


Tuesday, June 27, 2023

ShortNews Admin

ரகசியமாக நாட்டை முடக்கி தீர்மானமெடுக்க அரசு முயற்சி -ஜீ.எல். பீரிஸ்



தேசிய கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான அநீதியான செயற்பாடுகளுக்காக நாட்டை இரகசியமாக முடக்கிவிட்டு அவசர தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனால் நாட்டு மக்களே பாரதூரமான சிக்கலை சந்திக்க நேரிடும்.


மக்களை ஏமாற்றிவிட்டு அவர்களின் நோக்கங்களை மிகவும் புத்திசாலிதனமாக சாதித்துக்குகொள்ளவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 


கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  


தேசிய கடன் மறுசீரமைப்புக்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எந்த முறையில் மறுசீரமைப்பு பணிகளை செய்தாலும் மக்களுக்கு ஏற்படும் இழப்புக்குள் ஒருபோதும் குறையாது. அதனை நிச்சயமாக எதிர்கொண்டே ஆகவேண்டும்.


முதலில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் ஆகியனவே முதலில் தாக்கத்தை சந்திக்கும். அவற்றின் நிதி வளம் திறைசேரியின் கணக்கு பட்டியல் மற்றும் பிணைமுறிகளே முதலீடுகளாக அமைந்துள்ளன. நூற்றுக்கு 85 சதவீதம் திறைசேரியின் முதலீடாகும். 


இதனூடாக நிச்சயமாக தேசிய வங்கி கட்டமைப்பின் நிலைப்பேறு தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், இதனால் எந்த சக்கலும் ஏற்பாடாது, கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் எந்த குறைப்பாடும் இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார். தேசிய கடன் ஒருபோதும் மறுசீரமைப்பு செய்யப்படாது என்று அவரே இந்த நாட்டுக்கு அறிவித்திருந்தார். அவ்வாறு இருக்கையில், இதிலிருக்கும் நம்பகத்தன்மை என்ன? 


ஆகவே, இது பொய் என்றால் பின்விளைவுகள் தொடர்பில் ஒரு நம்பகமான நிலைப்பாட்டை உருவாக்கிக்கொள்ள முடியும். 79 இலட்சம் மக்கள் உணவுத் தேவைக்காக வீடுகளிலிருக்கும் தளப்பாடங்களை விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. நாட்டில் என்றாவதொரு நாள் இந்நிலை ஏற்பட்டது இல்லை. 


இந்த பின்னணியிலேயே தேசிய கடன் மறுசீரமைப்புச் செய்யும் அநீதியான செயற்பாடுகளுக்காக நாட்டை இரகசியமாக முடக்கிவிட்டு அவசர தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


அதன் பின்னர் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இதனையே, மக்களை ஏமாற்றிவிட்டு மிகவும் புத்திசாலிதனமாக சாதித்துக்குகொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. 


சகல கடன் உரிமைகயாளர்கள் தொடர்பிலும் ஒரேமாதிரியான கொள்கையை பின்பற்றுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறெனில் தேசிய கடன் தொடர்பில் விசேட தன்மைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை என்பதே இதன் பொருளாகும்.


வெளிநாட்டு கடன் உரிமையாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை போன்றதொரு செயற்பாடுகள் இல்லாமல், தேசிய கடன் உரிமையாளர்கள் தொடர்பில் சற்று மாறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 


இந்த நிலை வெளிநாடுகளுக்கு ஏற்பட்டபோது அவர்கள் மிகவும் சாணக்கியத்தனமாக நடந்துக்கொண்டன். 20 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தன.


ஆனால், அந்த நாடுகள் தேசிய கடன் மறுசீரமைப்பு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களில் ஆறு நாடுகள் வங்குரோத்து நிலையிலிருந்திருந்தாலும் அவர்களும் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 


நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு முன்னர், எமது நாட்டின் நிலைப்பாடே அவசியமாகும். எதற்கு இணங்க வேண்டும் எதற்கு இணங்க கூடாது என்பதே அவசியமாகவுள்ளது.


அதுதொடர்பில் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அரசியல் ரீதியாக எதாவதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் தேவைப்பாடாக இருக்கிறது என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »