தேசிய மற்றும் சர்வதேச கடன் மறு சீரமைப்பு, செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்று புதன்கிழமை (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.
அதன்படி இன்று விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உண்டான சந்திப்பும் நடைபெற உள்ளன.
இதன்போது கடன் மறு சீரமைப்பு திட்ட யோசனை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஏனைய தீர்மானங்களை விட கடன் மறுசீரமைப்பு தொடர்பிலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொது நிதி குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அத்தோடு வெள்ளியன்று சபாநாயகர் மஹிந்த அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சனிக்கிழமை (1) கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெறும் போது இதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
இதேவேளை மாலை 5 மணி அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சி குழு கூட்டமும் இக்கூட்டத்தில் கடன் மறு சீரமைப்பு திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட உள்ளது.
எனினும் இதன் போது அமைச்சுப் பதவிகள் மற்றும் அஸ்வெசுமத உள்ளிட்ட சில காரணிகள் தொடர்பிலும் பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார். அன்றைய தினமே அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்று இருந்தது.