நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிநடத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த இரு சந்தேக நபர்களையும் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (31) இரவு கல்முனை மாதவன் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் 3 கிராமும் 170 மில்லி கிராம் ஹேரோயின் பொதி செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவை சிறு சிறு பக்கற்றுக்களில் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க பொதி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் சிலர் வளர்ப்பு புறாக்களின் ஊடாக போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸாரிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பாறுக் ஷிஹான்