எரிபொருள் விலை புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை சம்மாந்தறை நிந்தவூர் அட்டாளைச்சேனை ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு இன்று காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் விலைக்குறைப்பு எரிபொருள்களுக்கு ஏற்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
-பாறுக் ஷிஹான் -