Our Feeds


Monday, June 26, 2023

ShortNews Admin

நெருக்கடியான சூழலில் கிடைத்த வாய்ப்பை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பயன்படுத்தவில்லை - குமார வெல்கம



(இராஜதுரை ஹஷான்)


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை இல்லையென்றால் மக்களாணை உள்ள, சிறந்த ஒருவரை அரசியல் தரப்பினர் முன்வைத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பயன்படுத்திக் கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான தீர்மானங்களினால் நாடு சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை அரசியல் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு என்ற ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகபெரும ஆகியோர் வெற்றிப்பெறவில்லை.134 மக்களாணையுடன் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப்பெற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை கிடையாது என எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதிக்கு மக்களாணை இல்லை என்றால் மக்களாணை உள்ள, சிறந்த ஒருவரை அரசியல் தரப்பினர் முன்வைத்தால்  அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

நெருக்கடியான சூழலில் கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நெருக்கடியான சூழலில் அரசாங்கத்தை ஏற்க அவர் முன்வரவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை ஜனாதிபதி பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »