Our Feeds


Thursday, June 15, 2023

SHAHNI RAMEES

குற்றவியல் சட்டத்தை நீக்கிய நான் கருத்துரிமையை பறிக்கமாட்டேன் - ஜனாதிபதி


வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.  


உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.


உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.




இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஐக்கிய இராச்சியத்திலுள்ள முறைமையை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 




ஹோமாகம பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் இன்று (15) இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 




இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,




கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போருக்கு தமது கடவுச் சீட்டுக்களை இணைய முறைமை ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 50 பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக விண்ணபிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  




அதேபோல் அனைத்து அரச துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்களை அறிமுகப்படுத்தி, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து தகவல்களையும் ஒரே கூறையின் கீழ் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை உருவாகிக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். 




இணைய முறைமை ஊடாக கடவுச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்துடன் துரித கதியில் முன்னெடுப்பதோடு, அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டின் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் முறைமையின் கீழ் வழிநடத்திச் செல்வதே எமது நோக்கமாகும்.




முன்னேறிய நாடாக நாம் பயணிப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது. அதன் முதல் அத்தியாயத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம். சில திணைக்களங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.




 சில இடங்களில் நடை முறைப்படுத்தப்படுவதில்லை. சில திணைக்களங்கள் இந்த முறைமையுடன் முன்னோக்கிச் செல்வதை விரும்புகின்றன. ஏதோவொரு காரணத்திற்காக சில திணைக்களங்களும் நிறுவனங்களும் இத்திட்டத்துடன் பயணிக்க மறுக்கின்றன. 




எவ்வாறாயினும் இவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு கொண்டு வருவதே எமது நோக்கமாகும். இந்த திட்டத்தை முதலில் ஆரம்பித்த அமைச்சர் டிரான் அலஸுக்கும் அவரது அமைச்சுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.  




பிறப்பிடம் முதல் மயான பூமி வரையிலான அனைத்து செயற்பாடுகளையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளோம். குடிவரவு, குடியகல்வு,தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட எமது வாழ்க்கைச் செயற்பாடுகளுக்கு அவசியமான அம்சங்கள் அடங்கிய விடயங்கள் அமைச்சர் டிரான் அலஸின் தலைமையில் அவரது அமைச்சின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கிறேன்.  




இந்த செயற்பாடு ஹோமாகம பிரதேச செயலகத்தில் இடம்பெறுவதால் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களும் பங்கேற்றுள்ளார். அதனால் ஊடகவியலாளர் இங்கு வந்து 'ஊடக அமைச்சர் ஊடகங்களை அழிக்கப் போகிறார், தென்கொரியாவை போன்ற நிலைமையை உருவாக்க போகிறார்' என எதிர்ப்பு போராட்டம் செய்வார்கள் என நினைத்தேன். 




ஊடகங்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன என எனக்குத் தெரியவில்லை. எமது தண்டனைச் சட்டக்கோவையில் குற்றவியல் அவதூறுச் சட்டம் காணப்பட்டது. நானே அதனை நீக்கினேன். ஆசிய வலயத்தின் எந்தவொரு நாடும் அதனை நீக்கியிருக்கும் என நான் நினைக்கவில்லை. 




இவ்வாறிருக்க பாதுகாக்கப்பட்ட கருத்துரிமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றன. எவருக்கும் அதனை நீக்குவதற்கான அவசியமில்லை. இங்குள்ள அனைவரையும் விட ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்பு எனக்கு உள்ளது. அதனால் கருத்துரிமையை பறிக்கும் நோக்கம் எவருக்கும் இல்லை. 




இங்குள்ள பிரச்சனை மாறுபட்டதாகும். ஊடகங்களால் அநீதி ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தினை சகல நாடுகளும் கொண்டுள்ளன. 




இங்கு அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்களின் எத்தனை பேருக்கு இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக அவதூறு ஏற்படுத்தப்பட்டிருக்கும். சில நேரங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரணம் என்ன, பொது மக்களுக்கு மாத்திரமின்றி எனக்கும் அந்த பிரச்சினை உள்ளது. 




தற்போது குருந்தி விகாரை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் அங்கு தமிழ் மக்களை குடியமர்த்தபோவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தும் அரசாங்க காணிகள் என்பதை எல்லாவல மேதானந்த தேரருக்கு அறிவித்துள்ளோம். அவ்விடங்களில் தமிழர்களையோ சிங்களவர்களையோ அல்லது முஸ்லிம்களையோ குடியமர்த்த போதவில்லை என்பதையும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.




இன்னொரு பக்கம் திரியாயவை உடைத்து கட்டிடம் கட்டப் போவதாகக் கூச்சல் இடுகின்றார்கள். அப்படி எதுவும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால், 2018 பாராளுமன்றக் குழு ஒன்றின் மூலம் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தக் காணி தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிக்குமாறு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.




குறிப்பாக இதைப் பற்றி என்னால் ஆராய முடியவில்லை என்றால், ஒரு சாதாரண மனிதனுக்கு அந்த நிவாரணம் எப்படி கிடைக்கும். அந்த நிவாரணம் வழங்க மட்டுமே நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த வரைவுகள் எதுவும் இன்னும் முடிக்கப்படவில்லை இறுதி செய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தின் இலத்திரனியல் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களைச் சேர்க்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.




தம்மைப் பற்றி பொய் ஒன்று கூறப்பட்டால், அதன் மூலம் அவர்களின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கப்பட்டால், எத்தனை பேர் வழக்குத் தொடுக்கலாம்? எனவே இந்த நிறுவனத்தை நிறுவுவதன் மூலம், அவர்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று முறைப்பாடு அளிக்கலாம். அதன்போது, ஊடகங்களுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வழிகாட்டுதல்கள் உள்ளன. அந்த வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.




இதை ஐக்கிய இராச்சியத்தின் சொற்களின் மூலமே தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நான் தெரிவித்துள்ளேன். ஏனெனில் அங்கு நாம் முடிவுகளை எடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெற முடியும்.


அதேபோன்று, மேலும் பல கேள்விகள் உள்ளன. சில ஊடகங்களுக்கு செய்திகளைத் தெரிவிப்பதற்கான உரிமம் கூட வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு கல்வி அனுமதிப் பத்திரமே உள்ளது. இவை அனைத்தையும் சரி செய்வதே எங்கள் நோக்கம். அதுவன்றி வேறொன்றுமில்லை.




ஒலிபரப்பு உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு தற்போதும் உள்ளது. எவரும் நீதிமன்றத்திற்குச் சென்று நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பை இந்தச் சட்டம் முன்மொழிகிறது.




நீதிமன்றத்திற்கு செல்லும் பிரேரணைக்கு எதிராக இருந்தால் அந்த அதிகாரத்தை அமைச்சரிடம் வைத்திருக்கச் சொல்லுங்கள். இதை ஒரு பொறிமுறைக்கு ஏற்ப முன்னோக்கிக் கொண்டு செல்லவே நாம் முயற்சிக்கிறோம்.




ஒரு சில நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. இது வேறு எதற்கும் அல்ல, வருமானம் பெறுவதற்காக. இந்த அனைத்து உரிமங்களையும் நாங்கள் இலவசமாக வழங்கினோம். அதைப் பெற்ற சிலர் அவற்றை விற்றுவிட்டனர். இலாபம் நாட்டிற்கு கிடைக்கவில்லை, அவர்களின் பாக்கெட்டுக்கே அது சென்றது.




இந்த முறைக்கு யாரும் பயப்பட வேண்டாம். இலத்திரனியல் ஊடகங்கள் எனது வீட்டை எரித்தது மட்டுமல்லாமல் பெறுமதிமிக்க சுமார் 3000 புத்தகங்களும் அழிந்தன. அது எனக்கு ஏற்பட்ட நட்டம். இப்போது, வீடுகளை எரிக்கும் அனுமதிப் பத்திரம் வேண்டும் என்றா கேட்கிறார்கள்?


 அமைச்சர் பந்துல குணவர்தன இன்று இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளார். இந்த ஹோமாகமவை அபிவிருத்தி செய்வதற்கு அவர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு நான் குறிப்பாக அவருக்கு நன்றி கூற வேண்டும். நான் ஊடகங்களுக்குச் சொல்கிறேன், பயப்பட வேண்டாம். எந்தவொரு பிரச்சினையையும் ஊடகத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »