Our Feeds


Wednesday, June 7, 2023

News Editor

எம்.பியின் மீது ஏன் சட்டம் பாயவில்லை?


 விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் அண்மையில் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமலாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) கேள்வி எழுப்பினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை செலுத்த முடியாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

74 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தின் விளைவா இது என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சபையில் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், எம்.பி பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், பாராளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவது முறை மாற்றமா என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பின்னால் இருக்கும் மறை கரம் யாது? என கேள்வி எழுப்புவதாகவும், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »