மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை வழங்குவதாக உறுதியளித்து ரூ.80 இலட்சம் பெற்று மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகயீனம் காரணமாக திலினி பிரியமாலி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து, வழக்கை ஒகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.