(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் கலந்து கொண்டேன். அதன் அர்த்தம் நாங்கள் பலஸ்தீனுக்கு எதிரானவர்கள் என்பதல்ல. ஆனால் சிலர் அரசியல் இலாபத்திற்காக என்னை விமர்சிக்கிறார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேலின் சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் அலிசப்ரி பங்கு கொண்டமை குறித்து முஸ்லிம் சமூகத்திலிருந்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; கடந்த இரண்டு வருட காலமாக ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் குறித்து இலங்கையின் தரப்பிலிருந்து ஒரு வார்த்தையேனும் கூறப்படவில்லை. ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் கடந்த முறை நான் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனுக்கு ஆதரவான இலங்கையின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தேன். இலங்கையின் நிலைப்பாடு குறித்து உரையாற்றினேன். நிலைப்பாட்டினை வலியுறுத்தினேன்.
கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேல் நாட்டு சுதந்திர நிகழ்வில் நான் பங்கு கொண்டதை சிலர் அரசியல் இலாபத்திற்காக விமர்சிக்கிறார்கள். இலங்கை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவினைப் பேணிவருகிறது. இந்நிலையில் இலங்கையில் அந்நாடு ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கு வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையிலே அதில் பங்கு கொண்டேன்.
நான் இஸ்ரேல் நாட்டின் நிகழ்வில் கலந்து கொண்டமை நாம் பலஸ்தீனுக்கு எதிரானவர்கள் என்பதல்ல, இலங்கை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது என்பதை மறந்து விட்டு சிலர் என்னைப் பற்றித் தவறாக விமர்சிக்கிறார்கள். இது தவறான மதிப்பீடாகும்.
நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் பலஸ்தீன் நாட்டுடனும், பலஸ்தீன் தரப்புகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். கொழும்பில் பலஸ்தீன் நடத்திய ‘நக்பா’ நினைவு தினத்தில் நான் வெளிநாட்டில் இருந்தமையால் பங்கேற்கவில்லை. பலஸ்தீனின் உரிமைகள் மற்றும் பலஸ்தீன் ஒரு தனி நாடு என்பதிலும் நான் உறுதியான நிலைப்பாடுடன் இருக்கிறேன். இது இலங்கையின் அணிசேரா கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.- Vidivelli